சென்னை: ’எங்கள் மாமனார், மாமியார், பாட்டி, தாத்தா காலத்தில், இந்த பகுதியில் தான் மீன் காய வைத்தோம். நாங்கள் இந்த வழியாக வாகனம் செல்ல அனுமதித்தோம். ஆனால், தற்போது நாங்கள் ஆக்கிரமிப்பு செய்து இருக்கிறோம் என்று சொல்லி எங்களை அப்புறப்படுத்துகின்றனர்’ என லூப் சாலையில் போராடும் நொச்சிக்குப்பம் மீனவப்பெண்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.
உலகப்புகழ் பெற்ற சென்னை மெரினா கடற்கரையில் இருந்து பட்டினப்பாக்கம் வரைக்கும் இருக்கும் சாலைதான் லூப் சாலை என்று அழைக்கப்பட்டு வருகிறது. இது காமராஜர் சாலைக்கு இணையான சாலையாக, சுமார் 2 கிலோ மீட்டர் தூரமாக உள்ளது. கடலுக்கு மிக அருகில் இருப்பதால், கடல் அழகை ரசித்துக் கொண்டே இந்த சாலையில் பயணம் செய்யலாம். இதற்காகவே கிரீன்வேஸ் சாலை, தினகரன் சாலை உள்ளிட்டப் பகுதிகளில் அமைந்திருக்கும் நீதிபதி குடியிருப்பில் இருந்து நீதிபதிகள், இந்த வழியாக பெரும்பாலும் நீதிமன்றத்திற்குச் செல்வார்கள்.
திடீர் குற்றச்சாட்டு ஏன்? லூப் சாலையின் அருகில் நொச்சிக்குப்பம், டுமீங்குப்பம் மற்றும் முள்ளிக்குப்பம் உள்ளிட்ட மீனவக் கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள், தினமும் இரவு மீன் பிடிக்கச்சென்று, லூப் சாலையின் ஒரு பக்கத்தில் வியாபாரம் செய்து வருகின்றனர். இதற்கென தனியாக தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வியாபாரம் செய்ய ஒதுக்கப்பட்ட இடத்தைத் தாண்டி சாலையின் மறுபுறம், விடுமுறை நாட்களில் வியாபாரம் செய்யத்தொடங்கி உள்ளனர்.
குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில், மீன் வாங்க வரும் கூட்டம் என்பது சற்று அதிகமாகவே இருக்கும் என்பதால், சாலையின் இருபுறமும் மீன் வியாபாரம் செய்கின்றனர். இதன் காரணமாக அந்தப்பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்படும்.
இந்த நிலையில், கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை செல்லும் லூப் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள மீன் கடைகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இதனை விசாரணை செய்த நீதிபதிகள், லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏப்ரல் 18ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.
ஆக்கிரமிக்கப்பட்டதா லூப் சாலை? உண்மையில் லூப் சாலையின் அருகில் நொச்சிக்குப்பம், டுமீங்குப்பம் ஆகிய கிராமங்கள் பல நூற்றாண்டுகளாக இதே இடத்தில் உள்ளதாகவும், தற்போது லூப் சாலையாக இருப்பது என்பது, 20 முதல் 30 வருடங்கள் முன்பு வரை பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல், மீனவ மக்கள் பயன்பாட்டிற்காகவே இருந்ததாகவும், அதன் பின்னர் மெல்ல மெல்ல பொதுமக்கள் அந்த வழியாக செல்லத் தொடங்கியதாகவும், 2015க்குப் பிறகு போக்குவரத்துக்காக சாலை அமைத்து, தற்போது லூப் சாலையாக பயன்பாட்டில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இது தொடர்பாக தென்னிந்திய மீனவர் சங்கத் தலைவர் பாரதி ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், “இந்த மீனவ கிராமம் பல ஆண்டுகளாக உள்ளது. 2015க்கு முன்னர் வரை, இந்த சாலையைப் பயன்படுத்தாமல், மாற்று சாலையில் சென்று கொண்டிருந்தார்கள். தற்போது சாலையில் ஆக்கிரமிப்பு என்று அகற்றுகின்றனர்.