சென்னை: கடந்தாண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதி நடந்த குரூப்-4(Group 4) தேர்வு முடிவுகள் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கடந்த 24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை முடிவுகளை வெளியிட்டது. கடந்தாண்டு தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிட்டபோது 7,301 பணியிடங்களாக அறிவிக்கப்பட்ட இந்த தேர்வில் கடந்த வாரம் கூடுதலாக சுமார் மூவாயிரம் பணியிடங்கள் சேர்க்கப்பட்டதால் மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 10,117-ஆக அதிகரித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வை பொறுத்தவரையில் 300-க்கு 90 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என்ற போதிலும் சாதிவாரியாக ஒதுக்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டின் படி அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கே பணிவாய்ப்பு கிடைக்கும். அதன்படி கிராம நிர்வாக அலுவலர்(VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் ஆகிய பணியிடங்களுக்கு உத்தேச தரவரிசை பட்டியலை பிரபல தனியார் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர் (Junior Assistant or JA) பணிக்கு OC பிரிவில் 60 ரேங்க் வரையில் எடுத்தவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. BC பிரிவை பொறுத்தவரையில் 2600 வரையிலும், BC(M) பிரிவில் 250 ரேங்க் வரையிலும், MBC பிரிவில் 1700 ரேங்க் வரை எடுத்தவர்களுக்கு அரசு பணி கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல் SC பிரிவை பொறுத்தவரையில் 900, SC(A) பிரிவில் 250, ST பிரிவில் 60 வரை தரவரிசை(Rank list) கொண்டவர்களுக்கு நிச்சயம் பணி வாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.