சென்னை: பாஜகவின் ஓ.பி.சி பிரிவு மாநில தலைவர் சூர்யா சிவா மற்றும் சிறுபான்மையினர் பிரிவு மாநில தலைவர் டெய்சி சரண் ஆகிய இருவரும் பேசிய ஆடியோவானது சமீபத்தில் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை டெய்சி சரண், பாஜக மாநில தலைமைக்கு எடுத்து சென்றார். இதற்கு ஒழுங்கு நடவடிக்கை குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் எனக் கூறிய அண்ணாமலை, சூர்யா சிவாவை ஆறு மாதத்திற்கு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். சூர்யா சிவா தனது தவறை ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார்.
நேற்று (நவ. 24) திருப்பூரில் கனகசபாபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சூர்யா சிவா மற்றும் டெய்சி சரண் கலந்து கொண்டு தங்கள் தரப்பின் செயல்பாடுகள் குறித்து எழுத்துப்பூர்வமாக கடிதம் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சூர்யா சிவா மற்றும் டெய்சி சரண், 'சூர்யா சிவா எனக்கு தம்பி போன்றவர்', 'டெய்சி சரண் எனக்கு அக்கா போன்றவர்' என இருவரும் மாறி மாறி சமாதானம் செய்து கொண்டனர். மேலும் கட்சி தலைமை என்ன நடவடிக்கை எடுத்தாலும் கட்டுப்படுவோம் எனவும் தெரிவித்தனர்.
"தனிப்பட்ட முறையில் ஆடியோ விவகாரம் சுமூக பேச்சுவார்த்தையில் முடிந்தாலும் அதை நியாயம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. சூர்யா சிவா என்னுடைய நன்மதிப்பை பெரும் வரையில் பாஜகவின் தொண்டனாக பயணிக்கலாம்" என அண்ணாமலை தெரிவித்தார். இப்போது தான் பாஜகவின் ஆடியோ விவகாரம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் உடனே சுமூக பேச்சுவார்த்தையில் முடிந்தது எப்படி என கேள்வி எழுந்தது. இது குறித்து பாஜகவினரிடம் விசாரிக்கும் போது பல தகவல்களை தெரிவித்தனர்.
அதில், "திமுகவில் உரிய அங்கீகாரம் கிடைக்காமல் பாஜகவில் இணைந்த திருச்சி சிவா மகன் சூர்யா சிவாவிற்கு மாநில பொறுப்பு வழங்கப்பட்டது. இது பாஜகவின் மூத்த தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக தென் மாவட்டங்களில் பாஜகவின் ஒரு முகமாக சூர்யாவை மாற்றுவதற்கான முயற்சி நடந்தது.