தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Gokulraj murder case: சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கு கடந்து வந்த பாதை! - Gokulraj murder case

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 8 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றம், தண்டனை குறைப்பு இல்லாமல் வாழ்நாள் முழுவதும் யுவராஜ் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

கோகுல்ராஜ் கொலை வழக்கு
கோகுல்ராஜ் கொலை வழக்கு

By

Published : Jun 2, 2023, 7:14 PM IST

சென்னை: சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் மாற்று சமூகத்தை சேர்ந்த சுவாதியை காதலித்ததற்காக 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாதீஷ்வரர் கோவிலுக்கு சென்ற கோகுல்ராஜை தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் உட்பட 17 பேர் கடத்தி பள்ளிப்பாளையம் ரயில் தண்டவாளத்தில் தலைதுண்டித்து ஆணவப் படுகொலை செய்தனர்.

தமிழகத்தையே உலுக்கிய இந்த ஆணவப் படுகொலை தொடர்பாக நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த வழக்கு கடந்த 2015ஆம் ஆண்டு மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

விசாரணை அதிகாரி தற்கொலை:நாமக்கல் திருச்செங்கோடு டிஎஸ்பியாக இருந்த விஷ்ணுபிரியா, கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரணை செய்யும் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். விசாரணை அதிகாரியான விஷ்ணுப்பிரியாவை பொய்யான நபர்களை கைது செய்யும்படி, அப்போதைய நாமக்கல் எஸ்பி செந்தில் குமார் மற்றும் உயர் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி டிஎஸ்பி விஷ்ணுபிரியா தனது முகாம் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டார். விஷ்ணுபிரியாவின் தற்கொலையை அடுத்து கோகுல்ராஜ் வழக்கில் காவல்துறை தீவிரமாக விசாரணையை மேற்கொண்டது.

தலைமறைவான யுவராஜ்:இந்த வழக்கில் தலைமறைவான முதன்மை குற்றவாளியான யுவராஜ், காவல்துறைக்கு எதிராக பல்வேறு அவதூறான கருத்துக்களை அவ்வபோது வீடியோவாக வெளியிட்டார். தான் தவறாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், தனக்கும் இந்த கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் 800க்கும் அதிகமான காவல்துறையினர் தன்னை தீவிரமாக தேடி வருவதால் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் தன்னை போலி எண்கவுண்டர் செய்து தனது உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடும் என்ற பயத்தில் 2015 அக்டோபர் 11ம் தேதி நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரண்டைந்தார்.

யுவராஜுக்கு மூன்று ஆயுள் தண்டனை: இந்த ஆணவக் கொலை வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்றம், யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனையும், அவரது கார் டிரைவருக்கு 3 ஆயுள் தண்டனையும், அவரது கூட்டாளிகள் 8 பேருக்கு ஆயுள்தண்டனையும் விதித்து 2022 மார்ச் 8ல் தீர்ப்பு வழங்கியது. மேலும் 5 பேரை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. குற்றம் சாட்டப்பட்ட இருவர் இறந்து விட்டதால், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட்டன. தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல் முறையீடு செய்தனர்.

பிறழ்சாட்சியான சுவாதி:இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளில் ஒருவரான சுவாதி, நீதிமன்ற விசாரணையின் போது 2022 நவம்பரில் இந்த வழக்கில் பிறழ் சாட்சியாக மாறி, திருச்செங்கோடு கோவிலுக்கு சென்ற போது யுவராஜ் உட்பட யாரையும் தான் அப்போது பார்க்கவில்லை எனவும், யுவராஜுக்கு தொடர்பு இருப்பதாக நேரடியாக கூறமுடியாது என பிறழ்சாட்சியம் அளித்தார்.

இதையடுத்து, விசாரணையின் தொடக்கத்தில் அரசு சாட்சியான சுவாதி, பின்னர் பிறழ்சாட்சியாக மாறி குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கத்தில் செயல்படுவதை ஏற்க முடியாது என கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, சுவாதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

நீதிபதிகள் நேரடி ஆய்வு:வீடியோ ஆதாரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளதாகவும், சாட்சிகள் பிறழ்சாட்சிகளாக மாறி வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்காத நீதிபதிகள் ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் இருவரும் தீர்ப்பு வழங்குவதற்கு முன் ஜனவரி 22ம் தேதி கோகுல்ராஜ் சென்ற திருச்செங்கோடு கோவில் மற்றும் ரயில் தண்டவாளங்களை நேரில் ஆய்வு செய்தனர். சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், 2023 பிப்ரவரி 23 ம் தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.

திருச்செங்கோடு கோயிலில் நீதிபதி ஆய்வு

யுவராஜுக்கு ஆயுள் உறுதி:இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (ஜூன் 2) தீர்ப்பளித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு, கோகுல்ராஜ் சுவாதியுடன் திருச்செங்கோடு கோவிலுக்கு சென்றது, அங்கிருந்து அவர் மாயமானது, தலை துண்டிக்கப்பட்ட நிலையில் யுவராஜ் உடல் ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டது போன்ற குற்றச் சங்கிலி தொடரை காவல் துறை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளதாகவும், சிறப்பு நீதிமன்ற தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை எனக் கூறி, யுவராஜ் உள்ளிட்ட 8 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர்.

அதேசமயம், யுவராஜுக்கு எந்த தண்டனைக் குறைப்பும் வழங்காமல், வாழ்நாள் முழுவதும் சிறையிலடைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், பிரபு மற்றும் கிரிதர் ஆகிய இருவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்தும் தீர்ப்பளித்தனர்.

மேலும், மதுரை சிறப்பு நீதிமன்றத்தால் ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டதை உறுதி செய்த நீதிபதிகள், யுவராஜ் உள்பட 10 பேரின் மேல் முறையீட்டு வழக்குகளையும், ஐந்து பேர் விடுதலைக்கு எதிராக கோகுல்ராஜின் தாய் சித்ராவும், காவல் துறையும் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.

தேவை ஊடக கட்டுப்பாடு:தலைமறைவாக இருந்த யுவராஜ், ஊடகங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தியதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இதுபோன்ற செய்கைகளை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் எனவும், கருத்து சுதந்திரத்தின் கட்டுப்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என அறிவுறுத்தினர்.

மேலும், இந்த வழக்கில் முக்கிய ஆதாரமான கண்காணிப்பு கேமரா பதிவுகள் சேகரிப்பில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற யுவராஜ் தரப்பு வாதங்களை நிராகரித்த நீதிபதிகள், எதிர்காலங்களில் குற்ற வழக்குகளில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் சேகரிப்பு மற்றும் பாதுகாப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளையும் வகிக்க வேண்டும் என நீதிபதிகள், தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: Gokulraj murder case: தீர்ப்பில் பிழை இல்லை.. 10 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி.. கோகுல்ராஜ் வழக்கு கடந்து வந்த பாதை!

ABOUT THE AUTHOR

...view details