தமிழ்நாடு

tamil nadu

2022 -2023 நிதியாண்டில் டாஸ்மாக் வருவாய் எவ்வளவு தெரியுமா?

By

Published : Apr 12, 2023, 7:40 PM IST

தமிழ்நாட்டில் வருவாயில் மது விற்பனை மற்றும் ஆயத்தீர்வை மூலமாக 2022 - 2023ஆம் ஆண்டில் 44,098.56 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளதாக கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் டாஸ்மாக் வருவாய் எவ்வளவு தெரியுமா? - வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!
கடந்த ஆண்டில் டாஸ்மாக் வருவாய் எவ்வளவு தெரியுமா? - வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

சென்னை: தமிழ்நாட்டில் வருவாயில் மது விற்பனை மற்றும் ஆயத்தீர்வை மூலமாக 2022 - 2023ஆம் ஆண்டில் 44,098.56 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளதாக கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு (2021 - 2022) 36,000 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருந்தது. இதனால் தற்போது 8 ஆயிரம் கோடி ரூபாய் அதிகமான வருமானம் டாஸ்மாக் மூலம் கிடைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும், 2003 - 2004ஆம் ஆண்டில் 3639.93 கோடி ரூபாயாக இருந்த தமிழ்நாடு அரசின் வருவாய், ஆண்டு தோறும் அதிகரித்து வந்துள்ளது. தமிழ்நாட்டில் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதற்கு வாய்ப்புள்ள நகர மற்றும் கிராம பஞ்சாயத்துப் பகுதியில் செயல்படும் 2 ஆயிரத்து 825 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணப் பாதுகாப்பு பெட்டகங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்தப் பண பாதுகாப்பு பெட்டகங்கள் ஒவ்வொன்றும் 300 கிலோ எடைக்கு மேல் இருப்பதுடன், பிற கருவிகளால் பழுது ஏற்படுத்த முடியாதவை ஆகும். எனவே இவை தரையில் பாதுகாப்புடன் புதைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) நிறுவனத்தின் பதிவு அலுவலகம் சென்னையில் அமைந்துள்ளது. சென்னை , திருச்சி, மதுரை, சேலம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 5 இடங்களில் மண்டல அலவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 2023 மார்ச் 31ஆம் தேதி வரையில் 38 மாவட்ட மேலாளர் அலுவலகங்கள், 43 இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானக் கிடங்குகள் மற்றும் 5 ஆயிரத்து 329 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளது.

இவற்றில் 6 ஆயிரத்து 648 கடை மேற்பார்வையாளர்களும், 14 ஆயிரத்து 794 விற்பனையாளர்களும், 2 ஆயிரத்து 876 உதவி விற்பனையாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். டாஸ்மாக் கடைகளில், மாநிலத்தில் இயங்கி வருகின்ற 11 இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபான உற்பத்தி நிறுவனங்கள், 7 பீர் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் 1 ஒயின் உற்பத்தி நிறுவனம் ஆகியவற்றிடம் இருந்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானம், பீர் மற்றும் ஒயின் வகைகள் கொள்முதல் செய்யப்படுகிறது.

எலைட் கடைகளில் 553 வகையான வெளிநாட்டு மதுபானம், பீர் மற்றும் ஒயின் வகைகளை எப்எல் 11 உரிமம் பெற்ற 238 மதுபான சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் பனை மரம், ஈச்சமரம் மற்றும் அவை போன்ற மரங்களின் பூம்பாளையில் இருந்து நொதிக்க விடமால் சேகரிப்படும் பிரபலமான ஊட்டச்சத்து பானமே பதநீர் ஆகும். பதநீரை சேகரித்தல், இருப்பு வைத்தல், கொண்டு செல்லுதல், விற்பனை செய்தல், விநியோகம் செய்தல் மற்றும் பதநீரில் இருந்து பொருட்களைத் தயாரித்தல் ஆகியவற்றை முறைப்படுத்தும் பொருட்டு உரிமம் வழங்கப்படுகிறது.

அதேபோல் தென்னை மரங்களின் பூம்பாளையில் இருந்து வரும் சாற்றில் இருந்து, நொதிப்பு உதிர்ப்பு தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஆல்கஹால் இல்லாத ஊட்டசத்து பானமே நீரா ஆகும். தென்னை மரங்களில் இருந்து நீரா சேகரிப்பதற்கும், நீராவிலிருந்து இதர பொருட்கள் தயாரிப்பதற்கும் உரிமங்கள் வழங்க அரசு அனுமதி வழங்கி உள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் நீராவை சேகரிக்கவும், விநியோகிக்கவும், விற்பனை செய்யவும் மற்றும் நீராவில் இருந்து பொருட்கள் தயாரிப்பதற்குமான உரிமங்கள் பெற தகுதி பெற்றவை ஆகும். உரிமம் கோரி விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள், அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் வளர்ச்சி வாரியத்திலும் பதிவு செய்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க:அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து சர்ச்சை கருத்து: பாஜக மாநில நிர்வாகி அதிரடி கைது!

ABOUT THE AUTHOR

...view details