சென்னை:வாச்சாத்தி கிராம விவகாரம் தொடர்பாக சிறப்பு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்யக்கோரி அதிகாரிகள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் தண்டனையையும் நீதிமன்றம் உறுதி செய்தது. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 18 பேருக்கும் 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் பின்னனி குறித்து விரிவாக பார்க்கலாம்..
வாச்சாத்தியும் - வன்முறையும்?சொந்த மக்களுக்கு எதிராகவே ஆயுதங்களை ஏந்தும் அதிகாரத்தை காவல் துறைக்கு யார் அளித்தது என்ற கேள்வியை 30 ஆண்டுகளுக்கு முன் தருமபுரி மாவட்டத்தின் வாச்சாத்தி மலைக் கிராம சம்பவம் நம்மிடையே எழுப்புகிறது. உண்மையில் அம்மக்கள் சந்தன மரங்களை பதுக்கினார்களா என்ற விசாரணையில் இருந்து இந்த வழக்கு தொடங்கிகுறது.
வாச்சாத்தி வன்முறையின் உச்சம்:தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி மலைக்கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, கடந்த 1992ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி வனத்துறையினர், காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அத்துமீறி குடியிருப்புகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, அந்த கிராமத்தில் இருந்த இளம்பெண்கள் 18 பேரை அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஆண்களை கடுமையாக தாக்கி வீடுகளை சேதப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 1992ஆம் ஆண்டு நடந்த வன்முறை குறித்து பலகட்ட போராட்டங்களுக்குப் பின் 1995இல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், 4 ஐ.எப்.எஸ் அதிகாரிகள் உள்பட 124 வனத்துறையினர், 86 காவல் துறையினர், 5 வருவாய்த் துறையினர் என 269 பேர் மீது கடுமையாக தாக்குதல் மற்றும் பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
1996ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கிய விசாரணை, 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2006ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு 1 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை விதித்தது. சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 2011-இல் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி வேல்முருகன், தீர்ப்பு வழங்குவதற்கு முன் பாதிக்கப்பட்ட மலைக்கிராம மக்களையும், அப்பகுதியையும் நேரில் ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தார். அதன்படி, 2023 மார்ச் 4ஆம் தேதி, சம்பவம் நடந்த வாச்சாத்தி மலைக்கிராமத்தில் நேரடியாக ஆய்வு செய்தார். வாச்சாத்தி மலைக்கிராமத்தில் இருந்து கலசப்பாடி, அரசநந்தம் உள்ளிட்ட மலைக்கிராம மக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் சம்பவம் குறித்து நேரடியாக கேட்டறிந்தார்.
தீர்ப்பு:மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு 13 ஆண்டுகளுக்கு பின்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதும், ஏராளமானோர் நேரடியாகவும், காணொளி வாயிலாகவும் நீதிமன்றத்தில் குழுமினர். தீர்ப்பை வாசித்த நீதிபதி, குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்தார். பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 18 பேருக்கும் ரூபாய் 10 லட்சம் இழப்பீடாக வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.