தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிதாக 3 கோயில்களில் 'நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்' தொடக்கம்

இராமநாத சுவாமி திருக்கோயில், அருணாசலேசுவரர் திருக்கோயில், மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆகிய கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

“நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்”: புதிதாக 3 கோயில்களில் தொடக்கம்
“நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்”: புதிதாக 3 கோயில்களில் தொடக்கம்

By

Published : Dec 31, 2022, 3:25 PM IST

சென்னை: தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இராமேசுவரம் அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆகிய கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தைக் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

2022 – 23ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையின் போது, “நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்” ஏற்கனவே ஐந்து திருக்கோயில்களில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இத்திட்டமானது தற்போது விரிவுபடுத்தப்பட்டு இராமேசுவரம் இராமநாதசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயில் மற்றும் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்களிலும் நடைமுறைப்படுத்தப்படும்” என அறிவிக்கப்பட்டது.

அதன்படி மேற்குறிப்பிட்ட மூன்று திருக்கோயில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை அன்னதானம் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் இம்மூன்று திருக்கோயில்களில் நாளொன்றுக்கு சுமார் 8 ஆயிரம் பக்தர்கள் அன்னதானம் பெற்று பயனடைவார்கள்.

திருக்கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானம் தரத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்திட இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தால் வழங்கப்படும் உணவு தர பாதுகாப்புச் சான்றிதழ் அனைத்து முதுநிலை திருக்கோயில்கள் உட்பட 314 திருக்கோயில்களுக்கு பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ. குமரகுருபரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 2022 ஆண்டுக் கண்ணோட்டம் - ஓராண்டில் தமிழக அரசு செய்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details