தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலின் தற்போதைய நிலை குறித்து இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கிராமப்புரங்களில் இந்த நோய்த் தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளபோதிலும், நகரப்புறங்களில், குறிப்பாக மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் தொடர்ந்து பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் அதிகளவில் நோய்த் தொற்று பரவ வாய்ப்புள்ளதால், இது குறித்து மருத்துவ மற்றும் பொதுச் சுகாதார வல்லுநர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டதில், நகர்ப்புறங்களில் ஊரடங்கை மேலும் கடுமையாக்கினால் மட்டுமே, தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
எனவே, தற்போதுள்ள சூழ்நிலைகளையும் வல்லுநர்களின் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில மாநகராட்சிகளில் தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005இன் கீழ், கீழ்கண்ட முடிவுகளை அரசு எடுத்துள்ளது.
- சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிப் பகுதிகளிலும், முழு ஊரடங்கு ஏப்.26ஆம் தேதி (ஞாயிறு) காலை 6 மணி முதல் ஏப்.29ஆம் தேதி (புதன்) இரவு 9 மணி வரை அமல் படுத்தப்படும்.
- சேலம், திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் முழு ஊரடங்கு ஏப்.26ஆம் தேதி காலை 6 மணி முதல் ஏப்.28ஆம் தேதி இரவு 9 மணி வரை அமல்படுத்தப்படும்.
இந்த ஊரடங்கு காலத்தில் கீழ்கண்ட அத்தியாவசிய பணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும்:
- மருத்துவமனைகள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத் துறை சார்ந்த பணிகள்
- அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச் செயலகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, காவல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மின்சாரத் துறை, ஆவின், உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தேவையான பணியாளர்களுடன் மட்டும் செயல்படும்
- இதர மத்திய அரசு அலுவலகங்களிலும், வங்கிகளிலும் அத்தியாவசிய பணிகளுக்குத் தேவைப்படும் 33 விழுக்காட்டு பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்
- அம்மா உணவகங்கள், ஏடிஎம்கள் ஆகியவை வழக்கம் போல் செயல்படும்.
- உணவகங்களில் தொலைப்பேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்
- முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோருக்கு உதவி புரிவோர் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படும்
- ஆதரவற்றோருக்காக மாவட்ட நிர்வாகங்கள், சமூக நலத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் தொடர்ந்து செயல்படும்
- ஏழைகளுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள், சம்பந்தப்பட்ட அரசு அலுவலரின் உரிய அனுமதியுடன் இயங்கலாம்
- கோயம்பேடு போன்ற மொத்த காய்கறிச் சந்தைகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும். அதேபோல் காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகள் மட்டும் அனுமதிக்கப்படும்.
- மேற்கண்ட நாட்களில் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட பிற கடைகள் எவற்றுக்கும் அனுமதி இல்லை.
- மேற்கண்ட பணிகளைத் தவிர, பிற பணிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்படுகிறது. இதர அரசு அலுவலகங்கள் (பத்திரப்பதிவு அலுவலகம் உட்பட) செயல்படாது.
- தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம். பிற தனியார் நிறுவனங்கள் செயல்படாது.
- மேற்குறிப்பிட்ட மாநகராட்சிகளைத் தவிர பிற இடங்களில்/பகுதிகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள்/அனுமதிகள் தொடரும்.
- இக்காலகட்டத்தில் நோய்த்தடுப்புப் பகுதிகள் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். இப்பகுதிகளில் தினந்தோறும் இருமுறை கிருமி நாசினி தெளிக்கப்படும்.
- மாநகரத்தில் பிற பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும். இந்தத் தடையை யாரேனும் மீறினால், அவர்கள் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், தடையை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
கரோனா வைரஸ் நோய்த் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகவும், தீவிரமாகவும் பரவும் தன்மையுள்ள கடும் நோய் என்பதால், இதைக் கட்டுப்படுத்த அரசு எடுத்துவரும் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.