சென்னை: மத்திய அரசு இந்தி மொழியைத் திணிக்க தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக தமிழ்நாடு உள்ளிட்டப் பல்வேறு மாநிலங்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் மீண்டும் இந்தி திணிப்பு சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆவின் பாக்கெட்டில் 'தயிர்' என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக இந்தி மொழியில் 'தஹி' என்று குறிப்பிட வேண்டும் என மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSAI) தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாகப் பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், "பால் பாக்கெட்டில் தயிர் என்று எழுதுவதற்குப் பதிலாக 'தஹி' என்று எழுத வேண்டும் எனக் கூறி, மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தது. இதனை ஆகஸ்ட் மாதத்திற்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. ஆனால், தயிர் என தமிழிலும், Curd என ஆங்கிலத்திலும் மட்டுமே அச்சிடுவோம் என்று தெரிவித்துவிட்டோம். கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளனர். அவர்களும் மொழிப்பற்று காரணமாக கடுமையாக எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர். இந்தி திணிப்பு என்பதால் தமிழக அரசு இதனை ஏற்கவில்லை" என்று கூறினார்.
மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சி என்று கடுமையாக சாடியுள்ளனர்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், "எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் #FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்! - மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! #StopHindiImposition. குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம். தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்" என்று கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், "தயிருக்கு தஹி என பெயரிட கட்டாயப்படுத்துவதா? நடுவண் அரசின் இந்தித் திணிப்பை தமிழக அரசு ஏற்கக் கூடாது. ஆவின் நிறுவனம் விற்பனை செய்யும் தயிர் உறைகளின் மீது தயிர் என்று எழுதக்கூடாது என்றும், தஹி என்ற இந்திச் சொல்லைத்தான் எழுத வேண்டும் என்றும், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் கட்டுப்பாடு விதித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. நடுவண் அரசின் இந்த மறைமுகமான இந்தி திணிப்பு கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக எந்த நெருக்கடிக்கும் ஆவின் நிறுவனம் பணியக்கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுக்கும் இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இதற்கு கர்நாடகா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் மத்திய அரசின் இந்தித் திணிப்பு முயற்சியை தமிழ்நாடு கடுமையாக எதிர்த்து வருகிறது. காரணம், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இந்தி திணிப்பு எதிர்ப்புக்கு நீண்ட வரலாறு உள்ளது.
தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு எதிர்ப்பு :1938ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த ராஜாஜி, பள்ளி பாடப் புத்தகத்தில் இந்தி மொழி கட்டாயம் என்று உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு தமிழ் உணர்வாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். 1939ஆம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் நடராஜன், தாளமுத்து ஆகியோர் சிறையிலேயே உயிரிழந்தனர். இந்தி திணிப்பை எதிர்த்து உயிரிழந்ததால் நடராஜன், தாளமுத்து ஆகிய இருவரும் மொழிப்போர் தியாகிகள் என இன்றளவும் போற்றப்பட்டு வருகின்றனர். இவர்களின் இருவரின் மறைவை அடுத்து 1940ஆம் ஆண்டு போராட்டம் கடுமையானதால் இந்தி மொழி கட்டாயம் என்ற உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.