சென்னை: வடபழனி தயாளு நகர் மெயின் ரோடு மற்றும் பாரதீஸ்வரர் நகர் 2ஆவது தெருவில் சாலையோரங்களில் நிறுத்தி வைத்திருந்த 7க்கும் மேற்பட்ட கார்களை நேற்று (ஜன.31) நள்ளிரவு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கல்லால் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கார்களை அடித்து உடைக்கும் சத்தத்தைக் கேட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வெளியே வந்து அந்த நபரை பிடிக்க துரத்திச் சென்றனர்.
அப்போது தப்பியோட முயன்ற அந்த நபரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து வடபழனி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். மதுபோதையில் இருந்த அந்த இளைஞரிடம் கார் கண்ணாடியை உடைத்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சுவராஸ்ய தகவல் வெளியானது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியரின் மகன் சாகித்யன் (23) என்பதும்; இவர் கடந்த ஒரு மாதமாக புத்தக கண்காட்சியில் வேலை பார்த்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
சாகித்யன் பல வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், சமீபத்தில் காதல் தோல்வி அடைந்ததால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சாகித்யன் சூளைமேடு பெரியார் பாதையில் உள்ள மதுபானக்கடையில் மது அருந்திவிட்டு, போதையில் அங்கிருந்த நபர்களிடம் வீண் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த நபர்கள் சாகித்யனை தாக்கிவிட்டு கையில் வைத்திருந்த செல்போனை பறித்துச்சென்றதாக தெரிகிறது.