சென்னை: ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்து, விநியோகிக்க தடை விதித்து, கடந்த 2018ஆம் ஆண்டு தமிழக சுற்றுச்சூழல் துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவில் சில விலக்குகள் அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, பொருட்களை உற்பத்தி செய்யும் இடங்களில், அதை அடைத்து வைப்பதற்காக பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அந்த பைகளுக்கும் தடை விதித்து கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த அரசாணையை தொடர்ந்து, கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவில், பொருட்களை அடைப்பதற்கான பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்வதற்கான நிறுவனங்களுக்கு, மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர்கள் அனுமதி அளிக்கக் கூடாது எனவும், ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தால், அதை வாபஸ் பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் இன்று(ஜூன் 6) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், "கடந்த 2020ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின்படி எந்த பொருளையும் பிளாஸ்டிக்கில் அடைக்க முடியாது. சுற்றுச்சூழல் துறை பிறப்பித்த இந்த உத்தரவு தன்னிச்சையானது. அரசின் ஆவின் நிறுவனம் பால் உள்ளிட்ட பொருட்களை அடைப்பதற்கு, பிளாஸ்டிக்கை தொடர்ந்து பயன்படுத்தப்படுத்த அனுமதிக்கப்படும் நிலையில், தனியார் நிறுவனங்களை தடுக்கும் வகையில் பாரபட்சமான அரசாணையாக இது உள்ளது. இந்த அரசாணையை ரத்து செய்யவில்லை என்றால், தமிழகத்தில் இயங்கும் குடிசை தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.