பிரான்ஸ் நாட்டு நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள தொழில், முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விளக்கும் வகையில் மூன்றாவது இந்தோ- பிரான்ஸ் தொழில் முதலீட்டு மாநாடு இணையம் வாயிலாக நேற்று (பிப். 11) நடைபெற்றது. இந்திய பிரான்ஸ் தொழில் கூட்டமைப்பு (Indo-French Chamber of Commerce) சார்பாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஏதுவான சட்டதிட்டங்கள், இங்குள்ள மனிதவளம், உள்கட்டமைப்பு வசதிகள் முக்கியப் பங்காற்றும் துறைகள் உள்ளிட்டவை குறித்து இந்தியா-பிரான்ஸில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு விளக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், ஏரேமண்ட் பாஸ்டர்னர்ஸ், கரையிலார், பெரிகா மோலன், டைமாக் அக்ரோ உள்ளிட்ட 4 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் 200 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்வதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன. வான்வெளி, பாதுகாப்பு, போக்குவரத்து, உற்பத்தி, மின்னணு உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்வது தொடர்பாக இந்த இணைய மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் முதலீடு செய்ய பிரான்ஸ் நிறுவனங்கள் ஆர்வம் தமிழ்நாட்டில் உள்ள சந்தை நிலவரம், தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்வதற்கான வசதிகள், தமிழ்நாடு அரசின் முதலீட்டு ஊக்குவிப்புத் திட்டங்கள், தமிழ்நாட்டில் உற்பத்தி செய்வதற்கான வசதிகள், தமிழ்நாட்டில் உற்பத்தி, சேவைகளுக்கான பணிகளை ஒப்பந்தம் விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து தொழில் நிறுவனங்கள் விவாதித்தன. செயின்ட் கோபைன், வாலியோ, ரெனால்ட் உள்ளிட்ட பிரான்ஸ் நிறுவனங்கள் ஏற்கனவே தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன. இவற்றின் வெற்றி குறித்தும், பிரான்ஸ் நிறுவனங்களுக்குத் தமிழ்நாட்டில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் தொழில் துறையினர் கலந்துரையாடினர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண்மை இயக்குநர் நீரஜ் மிட்டல், "தமிழ்நாடு தொழில் நிறுவனங்களில் பிரான்ஸ் நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, மிஷலின், ரெனால்ட் உள்ளிட்டவை தமிழ்நாட்டை தங்கள் தாய் நிலமாகக் கருதுகின்றன.
மேலும், ஒரு துறையில் மட்டும் முடங்கி இருக்காமல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஆட்டோமொபைல், உற்பத்தி, உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட பரந்துபட்ட துறைகளில் பிரான்ஸ் நிறுவனங்கள் இங்கு செயல்பட்டுவருகின்றன. இதற்கு மேலும் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வர வேண்டும் என வரவேற்கிறோம்" என்றார்.
பிரான்ஸ் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வம்! இந்திய பிரான்ஸ் தொழில் கூட்டமைப்பின் இயக்குநர் பாயல் எஸ். கன்வார் பேசுகையில், "பிரான்ஸ் நிறுவனங்களுக்குதமிழ்நாடு ஒரு முக்கியமான மாநிலம். இங்கு உற்பத்தி, ஏற்றுமதிக்கு சிறந்த வசதிகள் உள்ளன. இந்தக் கருத்தரங்கம் மூலம் தமிழ்நாட்டில் உள்ள வாய்ப்புகள் குறித்து பிரான்ஸ் நிறுவனங்கள் அறிந்துகொள்ளும் என நம்புகிறோம்.
ஏற்கனவே சில நிறுவனங்கள் 200 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுக்கு ஆர்வம் காட்டியுள்ளன. இதுவே தமிழ்நாட்டில் உள்ள சாதகமான தொழில் தொடங்கும் சூழலை விளக்குகிறது" என்றார்.
சென்னை, புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் துணை தூதரக அலுவலர் லிசே டால்போட் இந்த மாநாடு பற்றி பேசும்போது, "இந்தியா-பிரான்ஸ் வர்த்தக கூட்டமைப்பு, பிரான்ஸ் துணை தூதரகம் இணைந்து பிரான்ஸ் நாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க உதவிவருகிறோம்.
இது இரு நாட்டுக்கும் பொதுவான தேவைகளைப் பூர்த்திசெய்யவும், எதிர்காலத்திற்கான கனவுகளை நிறைவேற்றவும், இருநாட்டு நல்லுறவை மேம்படுத்தவும் உதவும்" எனத் தெரிவித்தார்.
சென்னை, புதுச்சேரி பிரான்ஸ் துணை தூதரகம், எல்காட், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம், மத்திய அரசின் முதலீட்டுப் பிரிவு, இந்திய தொழில்துறை கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளன.
இதில் நாட்டின் மூத்த அலுவலர்கள், மாநில அரசு அலுவலர்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.