சென்னை:ஆரூத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிக வட்டி தருவதாகக் கூறி, சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூபாய் 2,438 கோடி வசூலித்து மோசடி செய்ததாக, ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் உள்பட 21 பேருக்கு எதிராகப் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த மோசடியில், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் மாநில பாஜக ஒபிசி பிரிவு துணைத் தலைவரான ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பிருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகும்படி ஆர்.கே.சுரேசுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், ஆர்.கே.சுரேஷ்-க்கு எதிராகச் சென்னை மத்திய பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர்.
தனக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசை திரும்பப் பெறப் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி ஆர்.கே.சுரேஷ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அந்த மனுவில், "ஆரூத்ரா மோசடிக்கும், தனக்கும் தொடர்பில்லை எனவும் மனைவி மற்றும் குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக தற்போது துபாயில் உள்ள நிலையில் நாடு திரும்பினால் கைது செய்ய வாய்ப்புள்ளதால், லுக் அவுட் நோட்டீசை திரும்பப் பெற உத்தரவிட வேண்டு" என மனுவில் கோரப்பட்டு உள்ளது.
இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, டிசம்பர் 10ஆம் தேதி ஆர்.கே.சுரேஷ் நாடு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று (நவ. 30) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, டிசம்பர் 10ஆம் தேதி ஆர்.கே.சுரேஷ் நாடு திரும்ப உள்ளது குறித்து பிரமாண பத்திரத்தை அவரது வழக்கறிஞர் எஸ்.வீரராகவன் தாக்கல் செய்தார்.
காவல்துறை தரப்பிலும் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பாபு முத்து மீரான், லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதற்கான காரணத்தையும், அதை ரத்து செய்யக் கூடாது என்பது குறித்த விளக்கத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஆர்.கே.சுரேஷுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை நிறுத்தி வைத்தும், டிசம்பர் 12ஆம் தேதி விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டுமென்றும் ஆர்.கே.சுரேஷுக்கு உத்தரவிட்டார். அதுவரை ஆர்.கே.சுரேஷை கைது செய்யக்கூடாது என காவல் துறைக்கு நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க:சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு..