சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகம் மூலம் 20 லட்சம் டன் நிலக்கரியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்த அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் 18ஆம் தேதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இணையதளம் மூலம் வெளியிட்டது.
டெண்டர் இன்று (பிப். 24) நடைபெற உள்ள நிலையில் இதற்குத் தடைவிதிக்கக் கோரி தூத்துக்குடியில் தனியார் நிலக்கரி நிறுவனத்தைச் சேர்ந்த திருமலைச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், 2 கோடி ரூபாய்க்கு மேலான ஒப்பந்தங்களில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க குறைந்தபட்சம் 30 நாள்கள் வழங்க வேண்டும் என டெண்டர் வெளிப்படைச் சட்டத்தில் விதி உள்ளது.
ஆனால், 1,330 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த டெண்டருக்கு 15 நாள்கள் மட்டுமே தரப்பட்டதாகவும், வெளிநாட்டு நிறுவனங்கள் எளிதில் டெண்டர் எடுக்கும் வகையில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் விதிகளை மாற்றியிருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இந்த டெண்டரில் உள்நாட்டு நிறுவனங்கள் பங்கேற்க இயலாத வகையிலும், அதேசமயத்தில் வெளிநாட்டு நிறுவனங்களைப் பங்கேற்கும் வகையிலும் வெளியிடப்பட்டதாகும், மேலும் இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொண்டிருந்தார்.