தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 2, 2020, 10:06 AM IST

ETV Bharat / state

'பட்ஜெட் 2020ஆல் இலவச சிகிச்சை மறுக்கப்படும்' - மருத்துவர் ரவீந்திரநாத்!

சென்னை: தனியார் பங்களிப்புடன் மருத்துவமனையைத் தொடங்கினால் இலவச சிகிச்சை மறுக்கப்படும் என மருத்துவர் ரவீந்திரநாத் தெரிவித்தார்.

மருத்துவர் ரவீந்திரநாத் பேட்டி
மருத்துவர் ரவீந்திரநாத் பேட்டி

மத்திய அரசின் நிதிநிலை குறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்குப் பிரத்யேக பேட்டியளித்தார். அதில், 'மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஏறக்குறைய 4 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு 64 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்பொழுது 69 ஆயிரம் கோடி ரூபாயாக நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு ஏறக்குறைய 17 விழுக்காடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இன்றைய நிலையில் மக்கள்தொகை எண்ணிக்கைக்கு, மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அவர்களின் தேவைக்கேற்ப நிதி ஒதுக்கீடு இல்லை. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கிய நிதி உட்பட அனைத்தையும் கணக்கிட்டாலும் 1.5 விழுக்காட்டிற்கும் மேல் செல்வதற்கு வாய்ப்பில்லை. மத்திய பாஜக அரசு நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் 2.5 விழுக்காடு நிதியினை ஒதுக்கீடு செய்வோம் எனக் கூறியுள்ளனர். ஆனால் அதனைச் செய்யவில்லை. தேசிய நலன் கொள்கையும் செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர். எனவே இந்த நிதி போதுமானதாக இல்லை.

பாரத பிரதமரின் காப்பீட்டுத் திட்டத்திற்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கும் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியும் போதுமானதாக இல்லை. அதேபோல் நாடு முழுவதும் 2 ஆயிரம் மருத்துவமனைகளை தனியார் பங்களிப்புடன் கட்டுவதாக அறிவித்து உள்ளனர். மக்களின் வரிப்பணத்தை எடுத்து, தனியாருக்கு தாரை வார்க்க இந்தத் திட்டம் அமைந்துள்ளது. இதன் மூலம் ஏழை மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்தல் குறையும். எனவே, அரசு இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும். நாடு முழுவதும் மருத்துவமனை கட்டும் திட்டத்தை வரவேற்கும் அதே நேரத்தில் மருத்துவமனையில் அரசாங்கமே நேரடியாகத் தொடங்க வேண்டும். அரசு மருத்துவமனைகளையும் மாநில அரசே நேரடியாகத் தொடங்க வேண்டும். இதற்குக் கூடுதலாக தேவைப்படும் நிதியை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இது நாட்டு மக்களுக்கு நன்மையாக அமையும். தனியார் பங்களிப்புடன் தொடங்குவதால் பொதுமக்களுக்கு இலவசமாக சிகிச்சை கிடைக்காது. இந்தத் திட்டம் பொது சுகாதாரத் துறையை வலுவிழக்கச் செய்வதுடன் வேலையின்மையும் அதிகரிக்கச் செய்யும்.

மருத்துவர் ரவீந்திரநாத் பேட்டி


பிரதமர் காப்பீட்டுத் திட்டத்தை மீண்டும் விரிவுபடுத்துவதற்காக அறிவித்துள்ளனர். இந்தத் திட்டத்தில் ஏற்கெனவே ஒரு மிகப்பெரிய மோசடி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு தரப்பினருக்கு சிகிச்சைகள் மறுக்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தை விரிவு படுத்துவதன் மூலம் சாதாரண மக்களுக்கு அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை கிடைக்காமல் தடுக்கப்படும். காப்பீட்டு திட்டத்தை அந்தந்த மாநில அரசுகள் செயல்படுத்தும் வகையில் மத்திய அரசின் அறிவிப்பு இருக்க வேண்டும். அதற்கேற்ப திட்டத்தை மாற்றி செயல்படுத்த வேண்டும்.

மக்கள் மருந்தகங்களை மாதந்தோறும் விரிவுபடுத்தும் திட்டத்தை வரவேற்கிறோம். ஆனால் அதே நேரத்தில் ஜிப்மர் எய்ம்ஸ் மருத்துவமனையில் மக்கள் மருந்தகங்கள் தொடங்கப்பட்டு ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட மருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே, இந்த திட்டத்தை விரிவுபடுத்தி அரசு மருத்துவமனைகளில் தொடங்கி, ஏழைகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் நிறுத்தப்படக் கூடாது. இந்த மருந்துகளை ரயில் நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் குறைந்த விலையில் வழங்கலாம். தேசிய நலக் கொள்கை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனக்கூறப்பட்டுள்ளது. ஆனால், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை. எனவே, இது போன்ற குறைகளை நிதிநிலை அறிக்கையில் திருத்தம் செய்ய வேண்டும்' எனக் கூறினார்.

இதையும் படிங்க...பட்ஜெட் குறித்து தலைவர்கள் கருத்து

ABOUT THE AUTHOR

...view details