சென்னை: கிண்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அரசு பள்ளியில் படித்து 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் பயிலும், மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் முழுவதும் பதிவிறக்கம் செய்யப்பட்ட கையடக்க கணினியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாடு அரசின் 7.5% இட ஒதுக்கீட்டின் 2021-22 ஆம் முதலாம் ஆண்டு மருத்துவம் பயிலும் 445 மாணவர்கள், பல் மருத்துவம் 110 மாணவர்கள் என மொத்தம் 555 மாணவ,மாணவிகளுக்கு 82 லட்ச ரூபாய் செலவில் கையடக்க கணினி வழங்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக மருத்துவம், பல் மருத்துவம் பயிலும் 77 மாணவ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையடக்க கணினியை வழங்கினார். மீதமுள்ள மாணவ மாணவிகளுக்கு அவரவர் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
மேடையில் அனைத்து மாணவர்களுக்கும் கையடக்க கணினியை வழங்குவதற்கு முதலமைச்சர் விரும்பியதாகவும், பாடத்திட்டங்கள் முழுவதும் பதிவிறக்கம் செய்யப்படாததால் கல்லூரிகளில் வழங்கப்படும் என அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்தார். மேலும் இந்த விழாவிற்கு வந்த அனைத்து மாணவர்களுடன் முதலமைச்சர் குழு புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தொடர்ந்து மாணவர்கள் மேடைக்கு சென்று முதலமைச்சருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர் ஒரு சில மாணவர்கள் செல்பி எடுத்துக்கொண்டனர் . ஒரு சில மாணவர்கள் முதலமைச்சரிடம் கையெழுத்து பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்;
“தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் படித்து,போராடி நீட் தேர்வு எழுதி 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பில் வெற்றி பெற்றுள்ள மாணவ மாணவியர்களுக்கு கையடக்க கணினி முதலமைச்சரால் இன்று வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மட்டும் 8,075 பேர் மருத்துவம் பயில்கின்றனர், தமிழ்நாட்டில் இதுவே அதிக எண்ணிக்கையில் மருத்துவம் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஆகும்.
தமிழகத்தில் 100% சேர்க்கை என்பது இந்தாண்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 7.5% சதவீதத்தை சட்ட ரீதியாக போராடி உறுதி செய்தவர் முதலமைச்சர்.
புத்தகம், விடுதி கட்டணம், என ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டுக்கு 1,61,028 செலவிடப்படுகிறது. அந்த வகையில் மருத்துவம் பயிலக்கூடிய மாணவ மாணவியருக்கு 21,11,16,494 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. மாணவர்கள் நன்கு பயில கையடக்க கணினி வழங்கப்படுகிறது.
அதற்காக 120 கோடி ரூபாய் இந்த ஆண்டு மட்டும் செலவிடப்படுகிறது. அவர்கள் ஒவ்வோர் ஆண்டு படிக்கும் பொழுதும் அவர்களுக்கு உரிய தொகை உயர்த்தப்பட்டு நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு 480 கோடி ரூபாய் செலவிட வேண்டியுள்ளது” என தெரிவித்தார்.