சென்னை: சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 33 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதில், "ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்படும். தமிழ்நாடு முழுவதும் 4,000 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம், 2,000 மெகாவாட் திறனுள்ள மின் கலன் சேமிப்பு திட்டத்துடன் கூடிய சூரிய மின் சக்தி பூங்கா ஆகியவை வர்த்தக ரீதியான சாத்தியக்கூறு அடிப்படையில் நிறுவப்படும்.
புனல் மின் நிலையம்
எண்ணூரில் 2,000 மெகாவாட் அளவிற்கு சிறிய அளவிலான திறன் கொண்ட எரிவாயு இயந்திர மின் திட்டங்கள் சாத்தியக்கூறு அடிப்படையில் அமைக்கப்படும். கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் 500 மெகாவாட் சேமிப்பு புனல் மின் நிலையம் அமைக்கப்படும். பல்வேறு மாவட்டங்களில் 7,500 மெகாவாட் மொத்த நிறுவு திறன் கொண்ட 11 புதிய நீரேற்று புனல் மின் திட்டங்கள் அமைக்கப்படும்.
உடன்குடி விரிவாக்கத் திட்டம், அனல் மின் புதிய திட்டம் ஆகியவை மறு ஆய்வின் அடிப்படையில் அமைக்கப்படும். நீலகிரியில் சில்லஹல்லா நீர்மின் திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மூன்று வருட காலத்திற்கு 1,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும். தடையில்லா மின்சாரம் வழங்க குறுகிய கால ஒப்பந்தம் மூலம் மின் கொள்முதல் செய்யப்படும்.
உபரி மின்சாரம்
உபரியாக உள்ள காற்றாலை மின்சாரத்தை தேவைப்படும் மாநிலங்களுக்கு வழங்கி கோடை காலங்களில் திரும்பப்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒன்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் வட சென்னை அனல் மின் நிலையம் - 1இல் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வட சென்னை அனல் மின் நிலையம்- 2இல் உலர் சாம்பல் வெளியேற்றும் அமைப்பு அமைக்கப்படும். 1,979 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 159 புதிய துணை மின் நிலையங்கள் நிறுவப்படும். 125 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 110 கிலோ வாட் துணை மின் நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்.