தமிழ்நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் மே 1ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளில் பிராண வாயு இருப்பு போதுமான அளவு உள்ளது எனவும், தனியார் மருத்துவமனைகளை கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசம்! - இலவச தடுப்பூசி மையம்
19:42 April 22
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டு கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில், அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள், தேவைக்கேற்ப மேலும் உயர்த்தப்பட்டு, நோய்த்தொற்று விகிதம் அனைத்து மாவட்டங்களிலும் 10 விழுக்காட்டிற்கு கீழ் குறைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ்ரஞ்சன் உயர்மட்டக்குழுவினருடன் காலையில் ஆலோசனை நடத்தினார் .அதனைத் தொடர்ந்து மாலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவுவதை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் அமலில் இருந்து வருகிறது.
கரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், நோய்தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை ஓரிரு நாட்களில் கண்டறிந்து பரிசோதனை மேற்கொண்டு, அந்தந்த பகுதிகளிலேயே நோய் பரவலை கட்டுப்படுத்தி, நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்கவும் தீவிர நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது" என குறிப்பிடப்பட்டுள்ளது.