தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராமர் பிள்ளை: மூலிகை பெட்ரோலுக்கு அங்கீகாரம் வழங்க பரிந்துரை செய்த மோசடி கும்பல்! - மூலிகை பெட்ரோல்

சென்னை: பிரதமர், ஆளுநர் அலுவலகம் பெயரில் மோசடி செய்த கும்பல், ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலுக்கு அங்கீகாரம் வழங்குமாறு பிரதமர் அலுவலகத்தில் இருந்து அனுப்பியது போன்று போலி பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது சிபிசிஐடி விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராமர்பிள்ளை
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராமர்பிள்ளை

By

Published : Feb 23, 2021, 9:34 PM IST

பிரதமர் மற்றும் ஆளுநர் அலுவலகப் பெயரில் போலியாக அரசு ஆவணங்களை உருவாக்கியும், அரசு அலுவலகங்களில் இருந்து அனுப்புவதுபோல் மெயில் அனுப்பியும் மோசடி செய்த, பெங்களூரைச் சேர்ந்த மகாதேவய்யா, அங்கித், ஓம் ஆகிய மூன்று பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கடந்த சில நாள்களுக்கு முன்னர் கைது செய்தனர்.

இவர்கள் மூன்று பேரையும் 6 நாள் காவல் எடுத்து சிபிசிஐடி அலுவலர்கள் விசாரணை நடத்தினர். முன்னதாக நடத்தப்பட்ட விசாரணையில், பிரதமர் அலுவலகத்தில் வேலை பார்த்த இரண்டு ஓய்வுபெற்ற ஆட்சியர்கள் இரண்டு பேர் மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், மகாதேவய்யா மனைவி சுனந்தா பெயரில் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில், செயற்கை அருவி அமைக்கப்பட்ட இரண்டு சொகுசு பங்களாங்கள், மூன்று சொகுசு கார்கள், மைசூரில் ஏக்கர் கணக்கில் தென்னந்தோப்பு ஆகிய சொத்துக்களை வைத்திருப்பதையும் அலுவலர்கள் கண்டறிந்தனர்.

ஓம் பெயரிலும் அடுக்குமாடி குடியிருப்புகள், கோடிக்கணக்கான சொத்துக்கள் இருப்பதையும் அலுவலர்கள் கண்டறிந்தனர். இந்த மோசடிக் கும்பல் சொத்துக்களை முடக்குவதற்காக, அவர்கள் பெயரிலுள்ள சொத்துப்பட்டியலை கேட்டு கர்நாடக மாநில பதிவுத்துறை அலுவலகத்திற்கு சிபிசிஐடி காவல் துறையினர் கடிதம் அனுப்பியுள்ளனர்.

மேலும், காவல் துறையினர் நடத்திய விசாரணையில், மூலிகை பெட்ரோல் தயாரிப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டில் பிரபலமாக பேசப்பட்ட ராமர் பிள்ளைக்கு அங்கீகாரம் வழங்க போலியாக மத்திய அரசு பரிந்துரை செய்வதுபோல் கடிதம் தயாரித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை அங்கீகரிக்க வேண்டுமென பிரதமர் அலுவலகத்தில் இருந்து டி.ஆர்.டி.ஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்புக்கு போலியாக பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டதையும் விசாரணையில் உறுதி செய்துள்ளனர்.

இந்த மோசடி கும்பலிடம் ராமர் பிள்ளை ஏமாந்துள்ளாரா? அல்லது மூலிகை பெட்ரோலை அங்கீகாரம் பெற மோசடி கும்பலிடம் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டாரா என கண்டுபிடிக்க ராமர் பிள்ளைக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்ய சிபிசிஐடி காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கெனவே கேரள அரசு மூலிகை பெட்ரோல் தயாரிக்க அனுமதியளித்துள்ளதாகக் கூறி மீண்டும் தயாரிப்பு வேலையில் ஈடுபட்டிருக்கும் ராமர் பிள்ளை சர்ச்சையில் சிக்கியுள்ளார். கடந்த ஆறு நாள்கள் காவலில் எடுத்து நடத்தப்பட்ட விசாரணையிலும், மோசடி கும்பலுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையிலும் பல ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் சிபிசிஐடி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பிரதமர் அலுவலக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் மோசடியில் தொடர்பு!

ABOUT THE AUTHOR

...view details