கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குரூப்-4 தேர்வு நடைபெற்றது. இதில் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இந்தத் தேர்வுக்கான முடிவுகள் நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டதில், முதல் 100 இடங்களைப் பிடித்தவர்கள், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என தெரியவந்தது. இதில் முறைகேடு நடந்திருப்பதாக கல்வியாளர்கள் பலர் குற்றம்சாட்டினர்.
இதனையடுத்து டிஎன்பிஎஸ்சி விசாரணையை தொடங்கியது. தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற முதல் 100 பேரில் சந்தேகத்திற்கு இடமான 35 பேரை அழைத்து விசாரணை செய்தது. முறைகேடு நடந்திருப்பது உறுதியானதால் தமிழக டிஜிபியிடம் புகார் மனு அளித்தனர். தமிழக டிஜிபி உத்தரவின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் இதுதொடர்பாக விசாரணையை தொடங்கினர்.
முதற்கட்டமாக ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தாசில்தார் பார்த்தசாரதி, வீர ராஜு ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் , தேர்வு எழுதியவர்களில் 13 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். டிஎன்பிஎஸ்சி அலுவலகத்திலிருந்து முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேரின் தேர்வு தாள்கள் மற்றும் ஆவணங்கள் சீலிடப்பட்ட டப்பாக்களில் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேர் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தரவரிசை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவித்திருந்தது. குறிப்பாக அழியக்கூடிய பேனா மையை பயன்படுத்தி விடைத்தாளில் மோசடி செய்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. ஆனால் சிபிசிஐடி விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓஎம்ஆர் விடைத்தாள் ஒரிஜினல் போல் அச்சடிக்கப்பட்டு, சரியான விடைகள் குறிக்கப்பட்டதாகவும், தேர்வின்போது முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் எழுதிய ஓஎம்ஆர் சீட் மாற்றப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இடைத் தரகர்களுக்கு உதவியாக இருந்த டிஎன்பிஎஸ்சி அலுவலர்கள், ஓஎம்ஆர் விடைத்தாள் தயாரித்தவர்கள், தேர்வு கண்காணிப்பாளர்கள் ஆகியோரை யார் என கண்டுபிடிக்க போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு மேலும் குரூப்-4 தேர்வில் பணிக்கு ஏற்றவாறு பணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. அலுவலக உதவியாளர், சுருக்கெழுத்தர் போன்ற பணிக்கு 5 லட்சம் ரூபாயும்,கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு 8 லட்ச ரூபாய் வரையிலும் வசூல் செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. பணிக்கு ஏற்றவாறு பணம் வசூல் செய்யப்பட்டு, அதற்கு ஏற்றவாறு மதிப்பெண்கள் போடப்பட்டு தரவரிசை பட்டியலில் இடம்பெற வைத்ததாகவும் கூறப்படுகிறது. சிபிசிஐடி போலீசார் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தினர்.சிபிசிஐடி நடத்திய விசாரணையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறையில் உதவியாளராக பணிபுரியும் ரமேஷ்(39), எரிசக்தி துறையில் பணிபுரியும் திருக்குமரன் மற்றும் இந்தத் தேர்வில் வெற்றிபெற்ற நிதீஷ் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது 14 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.