தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்தின் பெயரில் 22 லட்சம் மோசடி - ஜாகுவார் தங்கம் புகார்!

Jaguar Thangam: தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தயாரிப்பாளர் சங்கத்தின் பெயரில் 22 லட்சம் மோசடி நடந்துள்ளதாக ஜாகுவார் தங்கம், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்தின் பெயரில் 22 லட்சம் மோசடி
தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்தின் பெயரில் 22 லட்சம் மோசடி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2023, 7:28 AM IST

சென்னை: தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்தின் பெயரில், சிலர் போலியான லெட்டர் பேட், சீல் ஆகியவற்றைப் பயன்படுத்தி 22 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், ஸ்டன்ட் மாஸ்டருமான ஜாகுவார் தங்கம், நேற்று (நவ.29) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த ஜாகுவார் தங்கம் கூறுகையில், “கடந்த 2018ஆம் ஆண்டு முதல் சங்கத் தேர்தலில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறேன். பதவி ஏற்ற பின்பு, ஏற்கனவே இருந்த நிர்வாகிகள் சங்கத்தின் பணத்தை கையாடல் செய்தது தொடர்பாக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.

அன்று முதல் தொடர்ந்து பல்வேறு வழியில் அவர்கள் சங்கத்திற்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். போலியான லெட்டர் பேட், பில்புக், சீல், ரசீதுகளைத் தயாரித்து, உறுப்பினர்களுக்கு போலியானச் சான்றிதழ் கொடுத்து மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், யூனியன் வங்கி சீலை போலியாக தயாரித்து, மோசடியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

போலி லட்டர் பேடில் எனது பெயர் இருப்பதால், பணத்தைக் கொடுத்து ஏமாந்த உறுப்பினர்கள் என்னை தொடர்பு கொண்டு கேட்பதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். குறிப்பாக, மோசடி நபர்களிடம் இது குறித்து கேட்டபோது, என்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டுகின்றனர்.

எனவே, சங்கத்தின் பெயரில் பணமோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்ட நபர்கள் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து, சங்கத்திற்கு சேர வேண்டிய பணத்தை மீட்டுத் தர வேண்டும். அது மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்களை சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ப்பதாகக் கூறி, 25 முதல் 50 ஆயிரம் வரை பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுபட்டு வரும் அந்த கும்பல், சங்கத்தில் வேலை செய்யும் நபர்களை உள்ளே வரவிடாமல் தடுத்து, தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:குய்கோ படத்திற்கு தயாரிப்பு நிறுவனம் உயிரோடு அஞ்சலி வைத்து விட்டது… இயக்குநர் வேதனைப் பதிவு!

ABOUT THE AUTHOR

...view details