சென்னை: அபிபுல்லா சாலையில் இயங்கிவருகிறது சிட்டி கிளப் எனும் சக்தி ரீ கிரியேஷன் சென்டர். இந்த கிளப்பில் உறுப்பினர்களாக இணைந்தால் பார், ஸ்பா, தங்கும் விடுதி, உடற்பயிற்சி கூடம், குடும்ப சுற்றுலா என பல வசதிகள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், அதற்கு ஆயுட்கால உறுப்பினராக இணைய 40 ஆயிரம் ரூபாய்வரை பணம் செலுத்த வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்படுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த தீனதயாளன் என்பவர் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், "இந்த கிளப்பில் இருந்து தொடர்புகொண்ட நபர்கள் 5000 ரூபாய் செலுத்தி கிளப்பில் சேர்ந்தால் குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் சலுகை வழங்கப்படும் எனவும், அதன்படி பணம் செலுத்த சென்ற தன்னிடம் தனது கிரெடிட் கார்டு மூலம் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்துவிட்டனர்.
சமரசம் பேசும் காவல்துறை
முறையாக எந்த சலுகையோ, வசதியோ செய்து கொடுக்கவில்லை எனவும், செலுத்திய பணத்தை கேட்டதற்கு, மேலும் பல சலுகைகள் இருப்பதாகவும் பல்வேறு ஆசைவார்த்தை கூறி ஒரு லட்சம் ரூபாய்வரை வசூலித்து கொண்டு தொடர்ந்து ஏமாற்றிவிட்டனர். இதுகுறித்து பாண்டி பஜார் காவல் துறையினரிடம் புகார் அளித்த போதும், புகாரை விசாரிக்கவில்லை.
மேலும், குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் சமரசம் செய்து கொள்ளும் வகையில், கிளப் நிர்வாகம் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்ள வேண்டுமெனவும் இல்லையெனில், சிவில் வழக்கு என்று நீதிமன்றத்தை நாடுமாறு கூறி புகாரை முடித்து வைக்க உள்ளதாகவும் தெரிவிப்பதாக தீனதயாளன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதேபோன்று பாதிக்கப்பட்ட சங்கர் என்பவர், 31 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தி கிளப்பில் உறுப்பினராக சேர்ந்ததாகவும், இதற்கு பல சலுகைகள் வசதிகள் உண்டு எனக் கூறி மோசடி செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதை அம்பலப்படுத்தும் வகையில் அபிபுல்லா சாலையில் உள்ள கிளப்பிற்கு நேரடியாகச் சென்று பெண் நிர்வாகிகளுடன் பேசும் போது ஆடியோ பதிவு செய்துள்ளார்.