சென்னை: கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர், வினோத். இவர் தண்டையார்பேட்டை - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நகைக்கடை நடத்தி வருகிறார்.
போனில் வங்கி அலுவலர் போல் பேச்சு
நேற்று இவருடைய செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதை எடுத்து பேசியபோது எதிர் முனையில் பேசியவர் தன்னை இந்தியன் வங்கி மேலாளர் என அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.
மேலும் புதிய ரூபாய் நோட்டுகள் வந்திருப்பதாகவும், உடனடியாக வங்கிக்கு வந்து பழைய நோட்டுகளை கொடுத்துவிட்டு புதிய நோட்டுகளைப் பெற்றுச் செல்லுமாறும் கூறியுள்ளார்.
உடனடியாக வினோத் தனது கடையில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை பாபு என்ற ஊழியரின் மூலமாக தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கிக்கு அனுப்பியுள்ளார்.
வங்கியின் உள்ளே பாபு நுழைந்தவுடன் ஒரு அடையாளம் தெரியாத நபர் அவரை வழிமறித்து, வினோத்திடம் போனில் பேசியது நான் தான் என்றும்; கொண்டுவந்திருக்கும் பணத்தை தன்னிடம் கொடுக்குமாறும் கூறினார்.
இந்தியன் வங்கி வளாகத்தில் மோசடி
இதனையடுத்து பாபு தான் கொண்டு வந்த பணத்தை அந்த நபரிடம் கொடுக்கவே, பணத்தை வாங்கி வங்கியில் கட்டுவது போன்று அங்கிருக்கும் படிவத்தை நிரப்பிக்கொண்டிருக்கும் வேளையில், கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இது குறித்து விவரம் அறிந்த வினோத் உடனே கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் வங்கி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
மேலும் தப்பிச்சென்ற நபரை, தனிப்படை அமைத்து காவல் துறையினர் சித்தூரில் வைத்து கைது செய்தனர். அதன்பின் அவரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், மோசடி செய்த நபரின் பெயர் முரளி (57) என்பதும்; இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
மேலும் முரளி மீது தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களில் பல வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் பண மோசடி- சைபர் கிரைம் விசாரணை