சென்னை: ஆன்லைன் மூலமாக லோன் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்வதாக எழுந்த புகார்களை அடுத்து, புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். இதில், மோசடி செய்த நபர்கள் டெல்லியிலிருந்து செயல்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, ஒன்றிய குற்றப்பிரிவு - வங்கி மோசடி புலனாய்வுப் பிரிவு காவல் உதவி ஆணையர் பிரபாகரன் தலைமையில் தனிப்படையினர் டெல்லியில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் இந்நபர்கள், பள்ளிக்கரணையைச் சேர்ந்த கனகலட்சுமி என்பவரிடம் லோன் வாங்கித் தருவதாகக் கூறி 82 ஆயிரம் பணத்தை வங்கிக் கணக்கில் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய அசோக் குமார், அவரது மனைவி காமாட்சி, அவர்களுக்கு உடந்தையாக இருந்த ராஜவேல், அபிஷேக் பால் ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்கள் அனைவரும் ஓராண்டுக்கு முன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைகப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
இவர்கள் இதே பாணியில் மேலும் பலரை ஏமாற்றியுள்ளது புலனாய்வில் தெரியவந்துள்ள நிலையில், தொடர்ந்து மோசடி செயலில் ஈடுபட்ட அசோக்குமார், அவரது மனைவி காமாட்சி அவர்களுக்கு உடந்தையாக இருந்த ராஜவேல் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்குமாறு சென்னை பெருநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நா. முத்துக்குமார் - வட்டத்திற்குள் சிக்காமல் வரிகளால் தாகம் தணித்தவர்