சென்னை: சென்னை விமான நிலையத்தின், சர்வதேச முனையத்தில் பயணிகள் வருகைப்பகுதியில் "டூட்டி ஃப்ரீ ஷாப்" எனப்படும் வரி இல்லாமல், பொருட்கள் வாங்கும் கடை உள்ளது. அதன் அருகே ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஏஜென்ட் ஒருவர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார்.
இதைக் கவனித்த சுங்க அலுவலர்கள், அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மிகுந்த பதற்றத்துடன் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்தார். அவரை சுங்கத்துறை அலுவலகம் அழைத்துச்சென்று சோதனை செய்தபோது, அவரது கைப்பையில், 4 பார்சல்களில் தங்கப்பசை இருந்ததை அலுவலர்கள் கண்டுபிடித்தனர்.
அந்த பாா்சல்களில் 43.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ எடை கொண்ட தங்கப்பசை இருந்தது. அதைப் பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், ஏா் இந்தியா ஊழியரிடம் தங்கப்பசை பாா்சல்கள் எப்படி வந்தன? என்று விசாரணை நடத்தினா். விமான நிலைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், துபாயிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த இலங்கைப் பயணி ஒருவா் எடுத்து வந்த கைப்பையை, ஏா் இந்தியா ஊழியா் வாங்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அந்த இலங்கை பயணி சுங்கச்சோதனையிலிருந்து தப்பிச்செல்ல, ஏா் இந்தியா ஊழியா் உடந்தையாக செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஏா் இந்தியா ஊழியரை கைது செய்த சுங்கத்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். தப்பியோடிய இலங்கை பயணியையும் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு