சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஆனால் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடைந்திருக்க வேண்டிய 14 வது ஊதிய ஒப்பந்தம் தற்போது வரை இறுதி செய்யப்படாமல் உள்ளது.
இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர் போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நேற்று (ஆகஸ்ட் 23) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் கோபால், நிதித்துறை இணை செயலாளர் அருண்சுந்தர் தயாளன், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் லட்சுமி காந்தன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 67 தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர்.
வழக்கமாக ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கலந்துரையாடல் அரங்கத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர், அமைச்சர், துறையின் செயலாளர் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தையாக நடைபெறும். ஆனால் நேற்றைய பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க பிரதிநிதிகளை தனித்தனியாக வரவழைத்து, தனி அறையில் அமைச்சர் சந்தித்துள்ளார்.
இறுதியாக கலந்துரையாடல் அரங்கத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனையில் ஈடுபட்டார். இருப்பினும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை காலத்தை நான்கு ஆண்டுகளாக அதிகரிக்கும் அரசின் முடிவிற்கு தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததாலும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படி உயர்வு தொடர்பாக இறுதி முடிவு எட்டப்படாததாலும் பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டது.