சென்னை:பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் லட்சுமி நகர் பகுதியில் புதிதாக அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. அங்கு கட்டிட பணியில் ஈடுப்படும் வடமாநில இளைஞர்கள் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில் மாறுவேடத்தில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வடமாநில இளைஞர்களிடம் கஞ்சா வேண்டும் என கேட்டுள்ளனர். கஞ்சா காலி ஆகிவிட்டது என கூறி அம்பத்தூரில் இருக்கும் நண்பரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கஞ்சாவை கொண்டுவர சொல்லியுள்ளனர்.
அப்போது கஞ்சாவை எடுத்து வந்த இருவரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்ட போது அம்பத்தூர் பகுதியில் கட்டிட வேலை செய்து வரும் வடமாநில இளைஞர்களிடம் கஞ்சா வாங்கி விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் சங்கர் நகர் போலீசார் அம்பத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த மேலும் இருவரை கைது செய்தனர்.
பின்னர் போலீசார் விசாரணையில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ஜமிரூல்(33), தெளபிக் ஹல்ஹக்(28), ஆப்டர்(31), அப்துல் மோடின்(30) என தெரியவந்தது. மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து சுமார் மூன்று கிலோ கஞ்சா, ரூ.7000 ரொக்க பணம் , செல்போன் ஆகியவை பறிமுதல் செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:வேலூரில் பயணிகள் ரயிலில் 16 கிலோ கஞ்சா கடத்தல்