சென்னை: மத்திய தணிக்கை மற்றும் கணக்குகள் சேவை துறை இயக்குனராக பணிபுரிந்தவர், பரமசிவன். இவர் நாடு முழுவதும் உள்ள பல நர்சிங் கல்லுாரி நிறுவனங்களுக்கு தணிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதன்படி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை நர்சிங் கல்லுாரியின் விதிமீறலை சரி செய்ய பரமசிவன் 35 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
ஆனால் இதனை கொடுக்க விரும்பாத தனியார் மருத்துவமனை நர்சிங் கல்லூரி நிர்வாகம் சார்பாக, சிபிஐ காவல்துறையில் மருத்துவமனை நிர்வாக அலுவலர் ஹரிஹரன் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தவணையான 5 லட்சம் ரூபாயை இயக்குனர் பரமசிவனின் உறவினர் சிவராம் திலகரிடம் வழங்கப்பட்டுள்ளது.
அப்போது சிபிஐ காவல் துறையினர் சிவராம் திலகரை கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக பரமசிவன், அவரது உறவினரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலருமான சிவராம் திலகர், தணிக்கை துறை ஆய்வாளர் துஷார் ரஞ்சன் சாமுவேல் ஆகிய மூன்று பேர் மீது கூட்டுச்சதி, ஊழல் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்து கைது செய்தது.
இந்த நிலையில் இதுதொடர்பாக சென்னையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இருந்த வழக்கை விசாரித்த நீதிபதி தனசேகரன், “குற்றச்சாட்டுக்கு ஆளான பரமசிவனுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. சிவராம் திலகருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. மற்றொரு குற்றம் சாட்டப்பட்ட நபரான தணிக்கை ஆய்வாளர் துஷார் ரஞ்சன் சாமுவேல் மட்டும் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார்” என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:ரூ.4 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக நண்பரை கொன்று விபத்து என நாடகம் - பெண் உள்பட 5 பேர் கைது!