சென்னை:பிரபல ஆன்லைன் கல்வி நிறுவனம் பெயரில் போலி காசோலை அச்சடித்து வங்கியில் 10 லட்சம் ரூபாய் பெற முயன்றது தொடர்பாக நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில், கடந்த 8ஆம் தேதி இளைஞர் ஒருவர் பிரபல ஆன்லைன் கல்வி நிறுவனத்தின் பெயரில் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும், நிறுவனத்தின் பெயரில் பரிந்துரைக் கடிதத்தையையும் வைத்து பணம் எடுக்க வேண்டி அந்த வங்கியின் மேலாளரை அணுகியுள்ளார்.
அந்த இளைஞர் மீது சந்தேகமடைந்த வங்கி மேலாளர் அந்நிறுவனம் குறித்து இணையதளத்தில் பார்த்தபோது நிறுவனத்தின் பரிந்துரை கடிதத்தில் இருந்த லோகோ மாறுபட்டு இருந்ததை கண்டறிந்தார். தொடர்ந்து, அந்நிறுவனத்தின் மேலாளருக்கு போன் செய்து விவரத்தை கூறினார்.
உடனடியாக நிறுவன மேலாளர் வங்கிக்கு விரைந்து வருவதற்குள் காசோலை கொண்டுவந்த இளைஞர் வங்கியில் இருந்து தப்பிவிட்டார். இதுதொடர்பாக, ஆன்லைன் கல்வி நிறுவனத்தின் மேலாளர், அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், திருவல்லிக்கேணி மதுபான பாரில் ஊழியராக பணியாற்றி வரும் பெரம்பூரைச் சேர்ந்த முத்துராஜ் என்பவர் வங்கியில் பணம் எடுக்க முயற்சித்தது தெரியவந்தது.
அவரை கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டதில், தஞ்சாவூரைச் சேர்ந்த பால தண்டாயுதபாணி, ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் தன்னிடம் காசோலையை கொடுத்து பணம் எடுத்து வருமாறு கூறி அனுப்பியதாகவும், அவர்கள் இருவரும் சேப்பாக்கத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருப்பதாகவும் தகவல் அளித்தார். பின்னர், இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அதில், பட்டதாரியான ரவிகுமார், சில மாதங்களுக்கு முன்பு நுங்கம்பாக்கம் ஐசிஐசிஐ வங்கியில் கடன் வேண்டி விண்ணப்பித்துள்ளார். கடன் வழங்க அப்போதைய மேலாளர் லஞ்சம் பெற்றுக்கொண்டு கடன் வழங்காமல், வங்கியில் கணக்கு வைத்துள்ள பணக்கார வாடிக்கையாளர்கள் விவரங்கள், கையொப்பங்களை வழங்கியுள்ளார்.
இதனைப் பெற்றுக்கொண்ட ரவிக்குமார், ஹைதராபாத்தில் தனக்கு தெரிந்த பெண் ஒருவரின் மூலமாக போலி காசோலைகளை அச்சடித்துள்ளார். மேலும், நுங்கம்பாக்கத்திலுள்ள வங்கியில் போலி காசோலையை பயன்படுத்தி பணம் எடுக்க முயற்சித்ததோடு, புனே, நொய்டா ஆகிய பகுதிகளில் இதே வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுத்தது தெரியவந்தது.
இதன்பின்பு அந்த வங்கிக் கணக்குகளை காவல்துறையினர் முடக்கினர். வங்கிக் கணக்குடைய நபர்களின் விவரங்களை பெற்று போலி காசோலைகள் மூலம் வங்கிகளில் மோசடி செய்ய திட்டம் போட்ட ரவிக்குமார், பாலதண்டாயுதபாணி, முத்துராஜ், இவர்களுக்கு உதவி புரிந்த முன்னாள் வங்கி மேலாளர் முத்துராஜ் ஆகிய 4 பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களை சிறையில் அடைத்தனர். மேலும், இவர்களுக்கு உதவிய ஹைதராபாத் பெண் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:வங்கிக் கடன் மோசடி: ஊழியரிலிருந்து கார் டீலர்கள் வரை செக்