சென்னை, மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு பணி மாறுதல், பணி உயர்வு கலந்தாய்வு சென்னையில் நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன், "மருத்துவர்களின் பணி மாறுதல் வெளிப்படைத் தன்மையோடு நடைபெற்றது. கடந்த ஓராண்டில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற 14,156 பேருக்கு பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளது. 1,008 பணி மாறுதலுக்கான கலந்தாய்வு நேற்று(மே24) முதல் தொடங்கியுள்ளது. கரோனா பேரிடர் காலத்தில் முழு அர்ப்பணிப்போடு பணியாற்றிய மருத்துவர்களுக்கு மாறுதல் என்பது ஒரு பரிசாக அமைந்துள்ளது.
மருத்துவர்கள் பணி மாறுதல் பெறும்பொழுது அவர்கள் முகத்தில் 1000 வாட்ஸ் பல்ப் எரிவதை போன்ற தோற்றத்தை பார்த்தோம். செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கான 1000 பணி மாறுதல் ஜூன் முதல் வாரத்தில் நடைபெற இருக்கிறது. இந்த துறையில் 4,308 பணியிடங்களை நிரப்ப உள்ளோம். அதில் 1021 மருத்துவர் இடங்களும், 18 வகையான சுகாதாரப் பணியாளர் இடங்களையும் நிரப்ப உள்ளோம். 4,308 பணியிடங்களை எம்.ஆர்.பி மூலம் நிரப்ப உள்ளோம். இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு நான்கு மாதகால அவகாசம் தேவைப்படுகிறது.