சென்னை:ரயில்வே காவல் துறை டிஐஜிக்கு புகார் ஒன்று வந்துள்ளது. அந்த புகாரில், "ரயில்வே தனிப்பிரிவு குற்ற புலனாய்வு துறை ஆய்வாளர் முருகன் ( பொறுப்பு ), பெரம்பூர் ரயில்வே காவல் நிலையம் உதவி ஆய்வாளர் குமார், காவலர்கள் தினேஷ் மற்றும் சுதாகர் ஆகியோர் ரயிலில் ஹவாலா பணம் கொண்டு வரும் பயணிகள் பிடிப்பட்டால், அவர்களிடம் பணப்பறிப்பில் ஈடுபடுகின்றனர்.
அவ்வாறு பணம் தரவில்லை என்றால், வருமான வரித்துறையினரிடம் பணத்தை ஒப்படைத்து விடுவோம் என பயணிகளை அவர்கள் மிரட்டுகின்றனர். மேலும் பயணிகளின் விவரத்தை முறையாக விசாரித்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் சொல்லாமல், வருமான வரித்துறையில் ஒப்படைப்போம் என பயணிகளிடம் பேரம் பேசி, காவல் துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக செயல்படும் ரயில்வே காவல் துறையைச் சேர்ந்த 4 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து ரயில்வே காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின் பேரில், ரயில்வே காவல் ஆய்வாளர் உள்பட 4 பேரிடமும் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. அதில், "லோக்மானிய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலில் எந்த வித ஆவணமும் இல்லாமல் பெரம்பூர் ரயில் நிலையம் வந்திறங்கிய நான்கு பயணிகள் வைத்திருந்த 2 கோடி ரூபாயை குற்றம் சாட்டப்பட்ட 4 ரயில்வே காவல் துறையினரும் பறிமுதல் செய்துள்ளனர்.
பின்னர் பணத்தை வருமான வரித்துறையில் ஒப்படைத்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த பணத்தை மீண்டும் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றால், குறிப்பிட்ட தொகையை தங்களுக்கு கொடுக்க வேண்டும் எனக்கூறி பணத்தை பெற்றுள்ளனர்" என தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் ஆய்வாளர் முருகன் உள்பட 4 பேரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து ரயில்வே காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:மனநலம் பாதித்த பெண்களுக்கு பாலியல் கொடுமை - 4 பேர் கைது.. 2 பேருக்கு வலைவீச்சு