சென்னை: சென்னையில் அண்ணா நகர், அடையாறு கோடம்பாக்கம் போன்ற சில மண்டலங்களில் மட்டும் தொற்றுப்பரவல் சற்று அதிகமாக காணப்படுகிறது. அண்ணா நகரில் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 146 ஆகவும், அடையாறு மண்டலத்தில் ஆயிரத்து 134 நபர்களும், கோடம்பாக்கம் மண்டலத்தில் ஆயிரத்து 115 நபர்களும் கரோனா தொற்றிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மண்டலங்களில் கூடுதல் மருத்துவ முகாம்களும், விழிப்புணர்வு நிகழ்வுகளும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நாள்தோறும் சராரியாக 30 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்று (ஜூன்.10) சென்னையில் 31 ஆயிரத்து 125 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் ஆயிரத்து 223 நபர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சென்னையில் கரோனா பரவல் நான்கு சதவிகிதமாக குறைந்துள்ளது.
சென்னையில் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி 26.6 சதவீதமாக இருந்த கரோனா பாதிப்பு, மே மாத இறுதியில் 5.9 சதவீதமாகவும், தற்போது குறைந்து நான்கு சதவீதமாகவும் உள்ளது.