தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருந்தி வாழ்ந்த ரவுடி.. போட்டுத்தள்ளிய பழைய கூட்டாளிகள்.. பாஜக பிரமுகர் கொலையில் திருப்பம்..!

தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியில் பாஜக பட்டியல் அணி மண்டலத் தலைவர் மர்ம நபர்களால் வெட்டி கொலைச் செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவந்த நிலையில், நான்கு பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.

bjp
பாஜக பட்டியல் அணி மண்டலத் தலைவர் கொலையில் திருப்பம் நான்கு பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2023, 12:45 PM IST

சென்னை: தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் குட்வில் நகர் பகுதியில் உள்ள காலி வீட்டுமனைப் பிரிவில் மர்ம நபர்களால் வெட்டப்பட்டு பலத்த காயங்களுடன் இளைஞர் இறந்த நிலையில் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக, பீர்க்கன்கரணை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த நிலையில் கிடந்தவரின் உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். பின்னர், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் இறந்த இளைஞர் பழைய பெருங்களத்தூர் காமராஜர் நகர் பகுதியில் வசித்து வந்த பீரி என்கின்ற வெங்கடேசன் (வயது 32) என்பது தெரியவந்தது. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அதே பகுதியில் ரவுடியாக வலம் வந்ததாக கூறப்படுகிறது. மேலும், கொலை வழக்கிலும் சம்பந்தப்பட்டு பலமுறை சிறைக்குச் சென்றதாக போலீசார் பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமீபத்தில் திருமணம் செய்து கொள்வதற்காக, போலீசாரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் ரவுடியிசத்தை கைவிட்டு திருந்தி வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் பின்னர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றி உள்ளார். இந்த நிலையில் தான் வெங்கடேசன் மர்ம நபர்களால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார்.

கொலைக்கான காரணம் மற்றும் எவ்வாறு இந்த கொலை சம்பவம் நடைபெற்றது என்பது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் டைசன் என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

சுமார் அரை கிலோ மீட்டர் ஓடிச் சென்று நாய் நின்ற நிலையில், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து பீர்க்கன்கரணை காவல்துறையினர் முன்விரோதமா, அரசியல் காழ்புணர்ச்சியா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வெங்கடேசன் கொலை வழக்கு சம்பந்தமாக கடலூர் நீதிமன்றத்தில் நான்கு நபர்கள் சரணடைந்திருப்பதாக பீர்க்கன்கரணை காவல்துறையினருக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் நான்கு பேரையும் கடலூரில் இருந்து பீர்க்கன்கரணை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது, ‘நாங்கள் எல்லோரும் சேர்ந்து ரவுடியிசத்தில் ஈடுபடும் போது, வெங்கடேசன் ரவுடியிசம் வேண்டாம் என அறிவுறுத்தி வந்ததாகவும், தங்களின் திட்டங்களை தெரிந்து கொண்டு அதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதால், ஆத்திரமடைந்த நாங்கள் நான்கு பேரும் குணா (வயது 35) சதீஷ் (வயது 22) சந்துரு (வயது 22) அருண் (வயது 24) வெங்கடேசன் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிக்கு வருவதை அறிந்து அவருக்கு மது கொடுத்து கத்தியால் தாக்கினோம்’ என விசாரணையில் தெரிவித்தனர்.

பின்னர் பீர்க்கன்கரணை காவல்துறையினர் நால்வர் மீதும் கொலை செய்ததற்கான வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின், நீதிமன்றத்தில் நான்கு பேரும் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பினர்.

இதையும் படிங்க:"காவேரி விவகாரத்தில் ஒழுங்காற்று குழு கர்நாடகத்திற்கு ஆரவாக உள்ளது" - அமைச்சர் துரைமுருகன்!

ABOUT THE AUTHOR

...view details