தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி சிவா கார் மீது தாக்குதல்.. திமுகவில் இருந்து 4 பேர் தற்காலிக நீக்கம்.. - திமுகவில் இருந்து நான்கு பேர் நீக்கம்

திருச்சி சிவா வீடு மற்றும் காவல் நிலைய தாக்குதல் தொடர்பாக திமுகவில் இருந்து 4 பேரை தற்காலிகமாக நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 15, 2023, 8:20 PM IST

சென்னை: திருச்சி மாவட்டம் ராஜாகாலனி பகுதியில் இறகுப்பந்து விளையாட்டு மைதானத்தை நகராட்சி துறை அமைச்சர் கே.என். நேரு இன்று (மார்ச் 15) காலை திறந்து வைத்தார். இதில், அதே பகுதியில் மாநிலங்களைவை உறுப்பினராக இருக்கக்கூடிய திருச்சி சிவா பெயர் கல்வெட்டில் இடம்பெறவில்லை என்று கூறி அவரது ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். ஒரு கட்டத்தில் திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் அமைச்சர் கே.என். நேருவிற்கு கருப்புக்கொடி காட்ட முயன்றனர். இதனால் அமைச்சர் கே.என். நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவாவின் வீடு மற்றும் கார் மீது கடுமையாக தாக்கி சேதப்படுத்தினர்.

இதன் தொடர்ச்சியாக, அருகில் இருந்த திருச்சி நீதிமன்ற காவல் நிலையத்தில் புகுந்த திருச்சி சிவா ஆதரவாளர்களை கே.என். நேரு ஆதரவாளர்களை தாக்கினர். பின்னர் இரண்டு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டதில் காவல் நிலையத்தில் இருந்த பெண் காவலர் சாந்தி காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திருச்சி சிவா ஆதரவாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் 15 பேர் மீது வழக்கும், கே.என். நேரு ஆதரவாளர்கள் கொடுத்த புகாரில் 15 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திமுகவின் பகுதி செயலாளர் திருப்பதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி திமுகவின் உட்கட்சி பிரச்னை காரணமாக காவல் நிலையைத்தை சேதப்படுத்தியதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “திமுகவினரால், இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ரவுடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. காவல் துறையை தன்வசம் வைத்துள்ள முதலமைச்சர், திருச்சி சம்பவத்திற்கு என்ன பதில் சொல்ல போகிறார்?" என கேள்வி எழுப்பினார்.

மேலும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், "ரவுடிகளைப் போல திமுகவினர் திருச்சி நீதிமன்ற காவல் நிலையத்தில் புகுந்து பெண் காவலரை தாக்கியதில் அவரது கை எலும்பு முறிந்து படுகாயம் அடைந்திருக்கிறார். இதற்கு உரிய தண்டனை பெறுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யுமா?" என கேள்வி எழுப்பினார். இந்த நிலையில், திருச்சி சிவா வீடு மீது தாக்குதல், காவல் நிலைய தாக்குதல் தொடர்பாக திமுகவில் இருந்து 4 பேரை தற்காலிகமாக நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "திருச்சி மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைச் செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளர் தி. முத்துசெல்வம், மாவட்டப் பொருளாளர் எஸ். துரைராஜ், 55 ஆவது வட்டச் செயலாளர் வெ. ராமதாஸ் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கேரள சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மோதல்!

ABOUT THE AUTHOR

...view details