சென்னை:தலைநகர் சென்னையில்காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்து வருகின்றனர்.
கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கடத்தல் தொடர்பான ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்று (ஜூன்6) அதிகாலை காவல் குழுவினர் கோயம்பேடு, என்.டி.பட்டேல் ரோடு, லட்சுமி திருமண மண்டபம் அருகில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கஞ்சா பறிமுதல்
அப்போது, சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த மூவரை பிடித்து விசாரணை செய்தனர். அவர்களிடமிருந்த பையை சோதனை செய்த போது, கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களை பிடித்து சென்று விசாரணை செய்ததில், பிடிபட்டவர்களில் இருவரின் பெயர் சௌந்தரபாண்டியன், உதயகுமார் என்றும், மற்றொருவர் 17 வயதுடைய இளஞ்சிறார் என்பதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்த 4 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தேனி டூ சென்னை
இவர்கள் தேனி மாவட்டம், போடியிலிருந்து சென்னைக்கு கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதைப் போல புழல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (ஜூன்5) காலை புழல் கேம்ப் சிக்னல் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இருவரிடம், சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. இருவரும் கஞ்சா கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. அதன்பேரில் இருவரையும் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்ததில், கைதானவர்களின் பெயர் ஜெயபிரகாஷ், பாலாஜி என தெரியவந்தது.
இவர்கள் ஆந்திர மாநிலம், தடாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்ததுள்ளனர். அவர்களிடமிருந்த 2 கிலோ 100 கிராம் கஞ்சா, 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான இருவரும் விசாரணைக்கு பின் நீதிமன்றத்தின் முன்நிறுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:'தடுப்பூசி இல்லை' காவல்துறையினருடன் பொதுமக்கள் வாக்குவாதம்!