சென்னை வேளச்சேரி, ஆதம்பாக்கம் பகுதிகளில் விலையுயர்ந்த போதைப்பொருள் விற்கப்படுவதாக சென்னை மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அடையாறு காவல் துணை ஆணையர் விக்ரமன் தலைமையில் வேளச்சேரி ஆய்வாளர் ஜெரி உள்ளிட்ட காவல் துறையினர் தனிப்படை அமைத்து ரோந்துப் பணிகளை மேற்கொண்டனர். அப்போது வேளச்சேரி பேபி நகர் பகுதியில் நேற்றிரவு (ஜூலை.09) வேளச்சேரி காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, கார் ஒன்றை மடக்கி சோதனை செய்தனர்.
அப்போது, காரை ஓட்டி வந்த திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அப்சல் (22) முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரின் உடமைகளை காவல் துறையினர் சோதனையிட்டனர். அப்போது அந்த நபர் ‘மெத்தபெட்டமைன்’ என்ற விலையுர்ந்த போதைப் பொருள் ஒரு கிராம் வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து அப்சலை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் தீவிர விசாரணை செய்ததில், போதைப் பொருள் கடத்தி விற்கும் திருவல்லிகேணியைச் சேர்ந்த அப்துல் கலிக் (48), சேட்டு முகமது (47), பஷீர் அகமது (47) ஆகிய மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.