சென்னை: பூந்தமல்லி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இவ்வாறு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், பூந்தமல்லி காவல் நிலைய ஆய்வாளர் கிளாஸ்டின் டேவிட் மற்றும் தனிப்படையினர் பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சந்தேகப்படும்படியான இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேரை மடக்கிப் பிடித்து விசாரித்துள்ளனர்.
அப்போது அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தபோது, அதில் போதை மாத்திரைகள் ஒரு அட்டைக்கு 30 மாத்திரைகள் வீதம் மொத்தம் 124 அட்டைகளில் மொத்தம் 3,750 போதை மாத்திரைகள் இருந்துள்ளது. இதனை அடுத்து அந்த 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக இது குறித்து விசாரணை செய்தபோது கைது செய்யப்பட்ட ஆகாஷ் (22), மாறன் (23), சீனுராஜ் (19), ஆனந்த் (19) ஆகிய நான்கு பேரும் முகப்பேரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், இவர்கள் நான்கு பேரும் தங்களது உல்லாச வாழ்க்கைக்குப் பணம் அதிகமாகத் தேவைப்பட்டதாகக் கூறி, போதை மாத்திரை விற்பனை மூலமாக அதிகப் பணம் தங்களுக்கு கிடைக்கும் என்று போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாகத் தெரிவித்துள்ளனர்.
இது மட்டுமல்லாது, இதற்காக ஹைதராபாத்தில் இருந்து கள்ளத்தனமாக போதை மாத்திரைகளை வாங்கி வந்து விற்பனை செய்து வந்ததாகவும், அப்படி விற்பனை செய்வதற்காக போதை மாத்திரைகளை பேக்கில் வைத்திருந்தபோது போலீசாரிடம் சிக்கிக் கொண்டதாகவும் விசாரணையின்போது தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து போலீசார் நான்கு பேரையும் பூந்தமல்லி நீதிமன்றம் எண் 2-இல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:விருதுநகரில் மதப்பிரிவினையை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு; ஆர்எஸ்எஸ் பிரமுகர்களுக்கு நிபந்தனையற்ற முன்ஜாமீன்!