சென்னை:திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கார்த்திகை தீபம், நேற்று (டிச.6) கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களிலும், தங்களது வீடுகளிலும் விளக்கேற்றி வழிபட்டனர். அதேபோல் சென்னையிலும் உள்ள பல்வேறு முக்கிய கோயில்களில் பக்தர்களின் வருகை அதிகளவிலிருந்தது. இந்த நிலையில் கார்த்திகை தீபம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது, சில விபத்துகளும் நேர்ந்துள்ளன.
விருகம்பாக்கம் ரெட்டி தெருவை பாக்கியலட்சுமி (52), கே.கே நகரில் உள்ள ஐயப்பன் கோயிலுக்குச் சென்று தீப விளக்கை ஏற்றியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பாக்கியலட்சுமியின் புடவையில் தீ பற்றி எரிந்துள்ளது. இதனை உணர்ந்த பாக்கியலட்சுமியின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் காயம் அடைந்த பாக்கியலட்சுமி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 40% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக கே.கே. நகர் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
திருவல்லிக்கேணி வி.ஆர்.பிள்ளை தெருவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்(26), தனது வீட்டருகே பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பட்டாசு அவரது கண்ணில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது ராதாகிருஷ்ணன் எழும்பூர் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக மெரினா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.