தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ஆளுநரும் அரசும் இணைந்து செயல்பட வேண்டும்" - UGC முன்னாள் துணை தலைவர் சிறப்பு பேட்டி!

University VC searching committee issue: தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர்கள் தேடுதல் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழுவின் முன்னாள் துணைத் தலைவர் தேவராஜ் ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியைக் காணலாம்.

UGC முன்னாள் துணை தலைவர் சிறப்பு பேட்டி
UGC முன்னாள் துணை தலைவர் சிறப்பு பேட்டி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2023, 9:14 PM IST

UGC முன்னாள் துணை தலைவர் சிறப்பு பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் துணைவேந்தர் பதவி நிரப்பப்படாமல் கடந்த ஒரு ஆண்டாக காலியாக இருந்தது. அதேபோல், கடந்த மாதம் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியும் காலியானது. இந்த நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தேடுதல் குழு நியமனம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதனையடுத்து ஆளுநரால் அமைக்கப்பட்டுள்ள இந்த தேடுதல் குழு முழுக்க முழுக்க பல்கலைக்கழகச் சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு மாறானது என்று கூறப்படுகிறது எனவும், அரசின் அலுவல் விதிகளின்படி அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட வேண்டும், ஆனால் ஆளுநர் தன்னிச்சையாக அறிவிக்கை வெளியிட்டது, மரபு மற்றும் விதிகளுக்கு முரணான செயலாக உள்ளது எனவும், ஆளுநர் தன்னிச்சையாக மூன்று பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை தெரிவு செய்வதற்கான தேடுதல் குழுவை அமைத்து வெளியிடப்பட்ட அறிக்கையினை அரசு சட்டப்படி எதிர்கொள்ளும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிக்கை வாயிலாக தெரிவித்து இருந்தார்.

மானியக்குழுவின் முன்னாள் துணைத்தலைவர் பேட்டி: இந்த நிலையில், பல்கலைக்கழக மானியக்குழுவின் முன்னாள் துணைத்தலைவர் தேவராஜ் ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், "பல்கலைக்கழக மானியக்குழுவின் உறுப்பினர் போடுவது என்பது ஒரு சட்டம்தான். அது ஒழுங்குப்படுத்தும் விதிமுறையாக இருந்தால் பின்பற்ற வேண்டும்" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஆனால், பாரதிதாசன் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், திறந்தவெளிப் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகத்திற்கும் 3 பேர் கொண்ட குழு தேர்ந்தெடுத்து பரிந்துரைத்த 3 துணை வேந்தர்களைத்தான் அந்தந்த பலகலைக்கழக துணைவேந்தர்களாக இதே ஆளுநர் நியமனம் செய்துள்ளார். அதனால் பல்கலைக்கழகத்தின் ஒழுங்குப்படுத்தும் விதிமுறையா அல்லது வழிகாட்டுதலா என்பது தெரிய வேண்டும்" என்று கூறினார்.

மேலும், "164 ஆண்டுகள் பழமையானது சென்னை பல்கலைக்கழகம். அப்போது பல்கலைக்கழக மானியக்குழு என்பது இருந்ததில்லை. பல்கலைக்கழக ஒழுங்குபடுத்தும் விதிமுறையாக போட்டு இருக்க வேண்டும். அதனால்தான் ஆளுநர் அதனை அமல்படுத்த வேண்டும் என கூறுகிறார்" என தான் நினைப்பதாக கூறினார்.

மேலும், இத்தகைய சர்ச்சைகளால் ஆளுநரோ, மாநில அரசோ பாதிக்கப்படப் போவதில்லை என்றும், இதனால் ஏற்படும் விளைவுகள் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளைத்தான் அதிக அளவு பாதிக்கும் என தெரிவித்தார், பல்கலைக்கழக மானியக்குழுவின் முன்னாள் துணைத் தலைவர் தேவராஜ்.

தொடர்ந்து பேசிய அவர், "பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமிக்காமல் இருப்பதால் பாதிப்பு பல்கலைக்கழகத்திற்கும், மாணவர்களுக்கும்தான். ஆளுநரும், தமிழ்நாடு அரசும் போட்டிபோடுவது இரண்டு புறமும் நியாயம் இல்லாத செயல்தான். எல்லாப் பல்கலைக்கழகத்தையும் கட்டுப்படுத்துவது பல்கலைக்கழக மானியக் குழுதான். அதில் கண்டிப்பாக ஒரு உறுப்பினர் இருக்க வேண்டும் என்பதுதான் சட்டம். அது அந்த காலத்தில் இருந்து நடைமுறையில் இருக்கிறது" என தெரிவித்தார்.

மேலும், பல்கலைக்கழக மானியக்குழுவின் துணைத்தலைவராக இருந்தபோது துணைவேந்தர் தேடுதல் குழுவின் பல்கலைக்கழக மானியக்குழு உறுப்பினராக கர்நாடகா, தெலங்கானா, மத்தியப்பிரதேசம், போபால் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு சென்றுள்ளதாகவும், அவை தமிழ்நாட்டில் நடைமுறையில் இருப்பதுபோல் தனக்கு தெரியவில்லை என்றும் கூறினார்.

"துணைவேந்தர்கள் இல்லாவிட்டால் அரசுதான் ஆட்சி செய்யும் என்றும், துணைவேந்தரை நியமிக்க வேண்டியது வேந்தர்தான். ஆனால் நிர்வாகத்தில் உயர் கல்வித்துறைச் செயலாளர் கூறுவதைத்தான் கேட்பார்கள். துணை வேந்தர் நியமிக்கப்படாததால் பாதிப்பு இருக்கிறதா என்பதை மாணவர்கள்தான் கூற வேண்டும்" என்று கூறினார்.

மேலும், துணைவேந்தர் நியமனம் செய்வதில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதிமுறைகள் உள்ளதாகவும், தேடுதல் குழுவிற்கு எத்தனை உறுப்பினர்கள் என்பதை சட்டத்தில் கூறி இருக்க வேண்டும் என்றும், சில மாநிலங்களில் மூன்று பேர் கொண்ட குழுவாகவும், சில மாநிலங்களில் நான்கு பேர் கொண்ட குழுவாகவும் துணை வேந்தர் தேடுதல் குழு செயல்படுவதாகவும், தமிழகத்தில் அதைப் போன்ற சட்டம் இருந்தால், அது நடைமுறை செய்யப்பட்டு இருக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும், "நீதிமன்றத்தில் இந்த வழக்கு எப்படி செல்லும் என்பதை சொல்ல முடியாது. பல்கலைக்கழக விதிமுறைகளின்படி 4 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆசிரியர்கள் தேர்வு செய்வதிலும் பல்கலைக்கழக உறுப்பினர் 4 பேர் இருக்க வேண்டும். நானே இதற்காக தமிழகத்தில் உள்ள பல பல்கலைக்கழகங்களுக்கு சென்றுள்ளேன்" என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "பல்கலைக்கழக நிர்வாகக் குழுவினர் புதிதாக பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், நிர்வாகக் குழுவிற்கு 3 மாதம்தான் இருக்கும் என்பதால், விளம்பரம் கொடுத்து துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகளைச் செய்வதில்லை.

சட்டம் ஏற்படுத்தப்பட்டு, அது சரியான முறையில் நடைமுறைப்படுத்தினால் சந்தோஷம்தான். அரசு நியமித்தாலும், ஆளுநர் நியமித்தாலும் சரியான நபரை, எந்தவித பாரபட்சமான செயல் இல்லாமல் தேர்வு செய்ய வேண்டும். ஆனால் ஆளுநரோ, அரசோ ஒரு சார்ந்து செயல்பட்டால் அனைவருக்கும் பிரச்னைதான்.

தமிழ்நாடு ஆளுநர் ஏற்கனவே 3 துணைவேந்தர்களை நியமனம் செய்துள்ளார். அப்போது பல்கலைக்கழக மானியக்குழுவின் பிரதிநிதி போடப்படவில்லை. இது குறித்து அவர்கள்தான் கூற வேண்டும். நீதிமன்றத்திற்குச் சென்றால் பல்கலைக்கழக மானியக்குழுவின் சட்டப்படிதான் செயல்பட வேண்டும் என உள்ளது.

பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் நியமனம் செய்வது முதல்வரே நியமிக்கலாம் என சட்டத்திருத்தம் கொண்டு வருகின்றனர். அது நல்லதுதான், துணை வேந்தரை மாநில முதலமைச்சரே தேர்ந்தெடுக்கலாம். மாநில அரசுதான் பல்கலைக்கழகங்களுக்கு நிதி வழங்குகிறது. ஆளுநர் எந்த விதமான நிதியும் வழங்குவதில்லை. எனவே அரசு சொல்வதுபோல் செயல்படலாம் என்பது என்னுடைய கருத்து" என கூறினார்.

ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி:முன்னதாக, மூன்று பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியைச் சேர்க்க வேண்டும் என ஆளுநரின் நிபந்தனையால் துணைவேந்தர் நியமனத்திற்கான குழு அமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில், பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளின்படி, மாநில பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமிக்க பல்கலைக்கழக விதிகளை மட்டும் பின்பற்றினால் போதுமானது எனவும், யுஜிசி சார்பில் உறுப்பினரைச் சேர்க்க வேண்டும் என்ற கட்டாய விதிமுறை இல்லை என ஏற்கனவே ஆளுநர் மாளிகைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவில் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர், தமிழக அரசின் பிரதிநிதி, ஆளுநரின் பிரதிநிதி என மூன்று பேர் மட்டுமே தற்போது வரை இருந்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று (செப் 6) ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையின் படி,

சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் தேடுதல் குழு:சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேடுதல் குழுவை அமைத்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை இன்று, www.tnrajbhavan.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. துணைவேந்தர் தேடுதல் குழுவில் 4 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு ஆளுநரின் பிரிதிநியாகவும், குழுவின் தலைவராகவும் கர்நாடக மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சத்தியநாராயணா, சிண்டிகேட் உறுப்பினராக மாநிலத் திட்டக்குழுவின் உறுப்பினர் ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தீனப்பந்து, செனட் உறுப்பினராக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஜெகதீசன், பல்கலைக்கழக மானியக்குழுவின் உறப்பினராக தெற்கு பிகார் மத்தியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் HCS ரத்தோர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பாரதியார் பல்கலைக்கழகதுணை வேந்தர் தேடுதல் குழு: கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேடுதல் குழுவில் 4 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு ஆளுநரின் பிரதிநிதியாகவும், குழுவின் தலைவராகவும் ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி P.W.C. டேவிதர், சிண்டிகேட் உறுப்பினராக சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் துரைசாமி, செனட் உறுப்பினராக சென்னை மற்றும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் திருவாசகம், பல்கலைக்கழக மானியக்குழுவின் உறப்பினராக பெங்களூர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் திம்மே கவுடா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணை வேந்தர் தேடுதல் குழு:தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேடுதல் குழுவில் 4 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு ஆளுநரின் பிரதிநிதியாகவும், குழுவின் தலைவராகவும் பல்கலைக்கழக மானியக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் சுஷ்மா யாதவ், தமிழ்நாடு அரசின் பிரதிநிதியாக ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலாவூதின், சிண்டிகேட் உறுப்பினராக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பத்மநாபன், பல்கலைக்கழக மானியக்குழுவின் உறுப்பினராக தெற்கு பிகார் மத்தியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் HCS ரத்தோர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

உயர் கல்வித்துறை அமைச்சரின் அறிக்கை:இந்த துணை வேந்தர் தேடுதல் குழு நியமனத்திற்கு தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சரும், பல்கலைக்கழகங்களின் இணை வேந்தருமான பொன்முடி எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதில், "தமிழ்நாட்டில் உயர்கல்வி துறையின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. அந்தந்த பல்கலைக்கழகங்களுக்கென தனித்தனியே சட்டம் மற்றும் விதிகள் உள்ளன.

இவற்றின்படி துணை வேந்தரின் பதவிக்காலம் முடிந்தவுடன், அதனை நிரப்ப தேடுதல் குழு அமைக்கப்பட்டு, அதன்மூலம் துணைவேந்தர் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்படுவார். உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பல்கலைக் கழக சட்டவிதிகளில், ஆளுநர், துணை வேந்தரை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவினை அமைக்க வழிமுறை இல்லை.

பாரதியார் பல்கலைகழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கான துணைவேந்தர் தேடுதல் குழு உறுப்பினர்கள் அந்தந்த பல்கலைக்கழகங்களின் விதிகளின்படி நியமனம் செய்யப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலோடு தமிழ்நாடு அரசிதழில் செப்.20 மற்றும் செப்.19 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.

இதுவரையில் எந்த ஒரு ஆளுநரும் தன்னிச்சையாக தேடுதல் குழுவினை அமைத்ததில்லை. அதற்கு விதிகளில் வழிவகையும் இல்லை. தேர்வுக்குழு குறித்த விவரங்களை அரசு தான் அரசிதழில் வெளியிடும். இதுநாள் வரையிலும் தேடுதல் குழு உறுப்பினர்கள் அந்தந்த பல்கலைக்கழக சட்டவிதிகளின்படி நியமிக்கப்பட்டு அரசாணை வெளியிட்டு, அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது ஆளுநர் நடைமுறையில் உள்ள பல்கலைக்கழக சட்ட விதிகளுக்கு எதிராக தேடுதல் குழுவை தன்னிச்சையாக முடிவு செய்து அறிவிக்கை வெளியிட்டுள்ளார். ஆளுநரால் அமைக்கப்பட்டுள்ள இந்த தேடுதல் குழு முழுக்க முழுக்க பல்கலைக்கழக சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு மாறானது.

அரசின் அலுவல் விதிகளின்படி, அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட வேண்டும். ஆனால் ஆளுநர் தன்னிச்சையாக அறிவிக்கை வெளியிட்டது மரபு மற்றும் விதிகளுக்கு முரணானது. தெலங்கானா மற்றும் குஜராத் மாநில பல்கலைக்கழகங்களில் உள்ளது போல் பல்கலைக்கழக துணைவேந்தரை தெரிவு செய்யும் அதிகாரம் அரசுக்கு அளிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா சட்டமன்ற பேரவையில் 25.04.2022ல் நிறைவேற்றப்பட்டு, 28.04.2022 அன்று ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், இது நாள்வரை மேற்படி மசோதாவிற்கு ஆளுநரிடமிருந்து ஒப்புதல் பெறப்படவில்லை. ஆளுநர் தன்னிச்சையாக பாரதியார், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை தெரிவு செய்வதற்கான தேடுதல் குழுவை அமைத்து வெளியிடப்பட்ட அறிக்கையினை அரசு சட்டப்படி எதிர்கொள்ளும்” என தெரிவித்து இருந்தார்.

இதையும் படிங்க: DMK-வை கடுமையாக தாக்கிய அண்ணாமலை!

ABOUT THE AUTHOR

...view details