திருவள்ளூர் மாவட்டம் காலரம்பாக்கம் தாலுகா, எல்லையம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் சுப்பிரமணி (57). இவரது மகள் ஹரி சாந்தி (32). இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அரும்பாக்கத்தில் உள்ள டிஜி வைஷ்ணவா கல்லூரியில் தெலுங்குப் பிரிவில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். தற்பொழுது பெரம்பூர் மாதாவரம் சாலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2012ஆம் ஆண்டு முதல் தெலுங்கு ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
அடிக்கடி அரும்பாக்கம் கல்லூரிக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்த ஹரிசாந்தி, நேற்று மதியம் 1.30 மணிக்கு கல்லூரிக்கு வந்துள்ளார். எதற்காக வந்தார்? யாரை பார்க்க வந்தார் என்பது பற்றிய தகவல் யாருக்கும் தெரியவில்லை.
இந்நிலையில், கல்லூரியின் முதல் மாடியில் தெலுங்கு வகுப்பறையில் ஹரிசாந்தி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். ஹரி சாந்தியின் இடது கை மணிக்கட்டு அருகே கத்தியால் கிழித்துக் கொண்ட ரத்த காயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கல்லூரி வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியுள்ளனர். ஹரி சாந்தி எப்போது கல்லூரிக்குள் வந்தார், ஏன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார், அவருக்குக் கல்லூரியில் நெருக்கமான நண்பர்கள் யார்? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.