சென்னை : கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு, சென்னையில் சிலை அமைக்கப்படும் என 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து இன்று மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கின் சிலையினை திறந்து வைத்தார்.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் மகன் அஜெய் ஈ.டிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்து உள்ளார். அதில், அவர், "தந்தையின் சிலை திறப்பை மண்டல் கமிஷனின் மறுபிறப்பாக பார்ப்பதாக தெரிவித்து உள்ளார். 1990ஆம் ஆண்டு மண்டல் கமிஷனின் பரிந்துரையை அமல்படுத்திய போது, அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி, அதைச் செயல்படுத்துவது பிரச்சினைக்குரியது என்று தெரிவித்ததாகவும், ஆனால் தற்போது அவரது மகன் ராகுல் காந்தியின் பயணம் வி.பி.சிங் அமைத்த வழியில் இருக்கிறது, பாஜகவை பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான கட்சி என விமர்சிக்கவும் ராகுல் தவறுவதில்லை" எனவும் கூறினார்.
மண்டல் கமிஷன் விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டு சேர்ந்து தனது தந்தையின் அரசை கவிழ்த்ததாகவும், ஆனால் தற்போது இரு கட்சிகளும் அதை ஏற்றுக்கொண்டு இருப்பது அரசியல் யதார்த்தமாக மாறிவிட்டதாகவும் அஜெய் தெரிவித்து உள்ளார். இதுவே அப்போதைய தலைவர்களை விட எனது தந்தையின் அரசியல் சிந்தனை 30 ஆண்டுகள் முன்னோக்கி இருந்தது என்பதை நிரூபிக்கிறது என்று அஜெய் தெரிவித்தார்.
1989ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வி.பி.சிங்கின் ஜனதா தளம் தலைமையிலான தேசிய முன்னணி 143 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும் ஆட்சி அமைக்க போதிய மெஜாரிட்டி இல்லாத நிலையில், இடதுசாரிகள் மற்றும் பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் ஆதரவுடன் தேசிய முன்னணி ஆட்சி அமைத்தது. வி.பி.சிங் பிரதமராக பதவியேற்றார்.