முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் அளித்த பேட்டி சென்னை: சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 15வது பட்டமளிப்பு விழாவில், முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் கலந்து கொண்டார். தொடர்ந்து கல்லூரியில் படித்த 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு அவர் பட்டங்களை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாணவர்கள் தொழில் தொடங்கினால், அதிலும் சொந்த ஆர்வம் மற்றும் யோசனையுடன் சிலவற்றைக் கண்டுபிடித்தால், பெரிய அளவிலான தொழில் நிறுவனங்களுக்கு பயன்படும்.
அதேபோல் தங்களின் முயற்சியில் சொந்தமான கண்டுபிடிப்புகளை வைத்து தொழில் தொடங்கினால், இவர்கள் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கலாம். இதனால் பெரிய தொழில் நிறுவனமாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. மாணவர்களின் வளர்ச்சி நல்லபடியாக இருக்கும். சொந்த ஆலோசனைகளை மற்றவர்களுக்கு கற்று கொடுக்கலாம்.
நாட்டு மக்களுக்கு வேலை வழங்குவதால், இந்தியாவிற்கே வளர்ச்சி உண்டாகும். பட்டம் பெற்ற மாணவர்கள் தொழில் தொடங்குவதற்காக அரசு பல திட்டங்களை வைத்துள்ளது. இதனை மாணவர்கள் சரியான முறையில் பயன்படுத்த முடியும். பட்டம் பெற்ற மாணவர்கள் வீட்டிலேயே உட்காராமல் வெளியே வந்து தேடிப் பர்த்தால் வாய்ப்புகள் நிறைய உள்ளன.
அகாடமி, ஸ்டார்ட் அப், இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டிரேட் அனைத்தும் மிக வலிமையாக உள்ளதால், மாணவர்கள் இதனை தகுந்த நேரத்தில் பயன்படுத்தினால் பெரிய ஆட்களாக வர முடியும். சிறு வயதிலேயே பெரிய தொழிலதிபர்களாக வாழலாம். எல்லாம் அவர்கள் கைகளில்தான் உள்ளது. புதிதாக ககன்யான் செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தொடர்ந்து அடுத்தப் பணியாக சந்திராயன் - 3 செயற்கைக்கோளும், சூரியனை ஆராயக் கூடிய ஆதித்யா எல் - 1 ஆகிய செயற்கைக்கோளும் தயாராகி வருகிறது. இது போன்ற ஏராளமான செயல்பாடுகள் இஸ்ரோவில் நிலுவையில் உள்ளன. குலேசகரப்பட்டினத்தில் விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கு, முதலில் மண் வலிமை எப்படி உள்ளது, எவ்விதமான கட்டுமானப் பணிகள் செய்யலாம் என்று ஆய்வு செய்த பின்னர், அதற்கான வேலை நிச்சயமாக நடக்கும். இதனால் குலசேகரப்பட்டினம் பகுதியில் உள்ள ஏராளமான மாணவர்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்" என்றார்.
இதையும் படிங்க:கோடைக் காலத்தில் மின் கட்டணத்தை குறைக்க 5 டிப்ஸ்