சென்னை: கடந்த 2006-2011 ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சியில் இருந்த போது சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலக கட்டடம் கட்டப்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த கட்டடம், கடந்த 2010 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி திறக்கப்பட்டது.
அதன்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிதாக பொறுப்பேற்ற அதிமுக, புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி அது குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் 2011 டிசம்பரில் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிடப்பட்டது.
இதை எதிர்த்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ரகுபதி தலைமையிலான ஆணையத்தை கலைத்து உத்தரவிட்டதுடன், இந்த முறைகேடு தொடர்பாக சேகரித்த ஆதாரங்களை புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. மேலும், ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கும்படி 2018 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், இது சம்பந்தமாக விசாரணை நடத்த அனுமதி அளித்து 2018 ஆம் ஆண்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து மு.க. ஸ்டாலின், துரைமுருகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விசாரணை நடத்தலாம் என்ற உத்தரவை ரத்து செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 2018 ஆம் ஆண்டு செப்டம்பரில் பொதுப் பணித்துறைக்கு புகார் அளித்ததாகவும், கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி, அதிமுக முன்னாள் எம்பி ஜெயவர்த்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் தற்போது ஆட்சியில் உள்ள திமுக, இந்த வழக்கில் விசாரணை நடத்த அக்கறைகாட்டவில்லை என்பதால், 2018 ஆம் ஆண்டு, தான் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மேல் முறையீட்டு வழக்கில் தன்னையும் இணைக்க வேண்டும் எனக் கோரியிருக்கிறார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பழைய ஒய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துக! - ஜாக்டோ ஜியோ அமைப்பு கோரிக்கை!