சென்னை:இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அன்மையில், பொதுமக்கள் கொழும்பில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். நாள்தோறும் அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து வரும் நிலையில், மக்கள் வாங்கும் சக்தியை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பொருளாதார நெருக்கடியை தாக்கு பிடிக்க முடியாத இலங்கையில் இருந்து மக்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு படையெடுத்து வரும் சூழல் உருவாகி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் தடை பகுதியில் இலங்கை தமிழர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் நேற்று (மார்ச்.23) அருகே தஞ்சம் அடைந்தனர்.
இதனிடையே, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் நேற்று (மார்ச்.23) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " இந்தியாவிடம் இருந்து இலங்கை பல கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளது. அதை மீண்டும் இலங்கையால் தர முடியாது. பொருளாதார நெருக்கடியில் இலங்கை இருப்பதற்கு காரணம் கரோனா மட்டுமல்ல, ஏனென்றால் உலகம் முழுவதும் கரோனா தாக்கியது.
அங்கு நடந்த மிகப்பெரிய ஊழல் தான். எற்கனாவே சீனா இலங்கையில் பல்வேறு இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இன்னும் இடங்களை கைப்பற்ற உள்ளது. வாங்கிய கடனை செலுத்துவதற்காக மற்றும் ஒரு கடன். இதுவும் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம். 1 கிலோ பச்சை மிளகாய் 1000, 1 கிலோ முறுங்கை ரூபாய் 1500. இது போன்று அனைத்து காய்கறி விலையும் அதிகரித்து உள்ளது. தொடர்ந்து பொருளாதார சிக்கல் நீடித்தால் இலங்கை மக்கள் தமிழகத்திற்கு வரும் எண்ணிக்கை அதிகரிக்கும்.