சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அக்கட்சியில் அன்வர் ராஜா இணைந்தார். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. இதில், எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்து, சசிகலா மற்றும் டிடிவி தினகரன் அதிமுகவில் இணைத்தால் தான் கட்சி வெற்றி பாதைக்கு செல்லும் என அன்வர் ராஜா கருத்து தெரிவித்திருந்தார். மேலும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தோல்விக்கு காரணம் எனவும் கூறியிருந்தார்.
இதனால், கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாக அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் பயணம் செய்தவர் அன்வர் ராஜா. 2001 முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சியில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராக பணியாற்றியுள்ளார். மேலும் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தமிழ் மகன் உசேனுக்கு அடுத்தபடியாக சிறுபான்மையினர் சமூகத்தின் ஒரு முகமாக கருதப்பட்டவர் அன்வர் ராஜா.
ராமநாதபுரம், முதுகுளத்தூர் பகுதிகளில் இஸ்லாமிய சமூகத்தின் வாக்குகள் அதிகமாக உள்ளன. இதனால், அன்வர் ராஜா அதிமுகவில் இணைந்தது அக்கூட்டணிக்கு வலு சேர்க்கும் என கூறப்படுகிறது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையிலான ஒற்றை தலைமை விவகாரத்தில் நடுநிலைமையாக இருந்த அன்வர் ராஜா, இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் தன்னை கட்சியில் இணைத்துக் கொள்ளலாம் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.