சென்னை: தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர். ராதா (86) சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். எம்ஜிஆர் அமைச்சரவையில் துணி மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சராகப் பதவி வகித்தவர், எஸ்.ஆர். ராதா. இவர் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர். ராதாவிற்கு ஓபிஎஸ், இபிஎஸ் இரங்கல் - former minister sr radha passed away
தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர். ராதாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் இரங்கல் தெரிவித்தனர்.
உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த இவர் சிகிச்சைப் பலனின்றி இன்று (டிச. 08) காலமானார்.
இந்நிலையில்,அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர். ராதாவிற்கு இரங்கல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், ”மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் மீது மிகுந்த விசுவாசம் கொண்டிருந்த ஆரம்பகால கழக உடன்பிறப்பு அன்புச் சகோதரர் எஸ். ஆர். ராதா அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.