மதுரை:தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவரம் அடைந்துள்ளது. சென்னையில் பெய்த கனமழையால் சாலைகள், வீடுகளில் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் 2ஆவது நாளாக இன்றும் நேரில் ஆய்வு செய்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வெள்ள பாதிப்பு தொடர்பாக அரசின் செயல்பாடுகள் குறித்து முன்னாள் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று (நவ.8) மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது " வெள்ளத்தால் தத்தளிக்கிறது தலைநகரம். மழை காலத்தின் துவக்க நிலையிலேயே, இரண்டு நாள் பெய்த மழைக்கே சென்னை கடல் போல காட்சி அளிக்கிறது. இது மிகவும் கவலையாக இருக்கிறது. 20 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்யும் என கணிக்கப்பட்ட நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அம்மா உணவகங்கள் மூலம் உணவு
சென்னையில் தண்ணீர் தேங்கி பாதிப்பிற்கு உள்ளாகும் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன.
இருந்தும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆய்வு கூட்டங்களை நடத்தி, அறிவிப்புகள் வெளியிட்டார் முதலமைச்சர். ஆனால், அவை வெறும் அறிவிப்புகளாக மட்டுமே உள்ளன. வெள்ள பாதிப்புகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். அதிமுக ஆட்சியில் மழை பாதிப்பு காலங்களில் அம்மா உணவகங்கள் மூலமாக இலவச உணவு வழங்கப்பட்டது. ஆனால், தற்போது உணவக ஊழியர்கள் சம்பள பிரச்னையில் உள்ளனர். இதை அரசு எப்படி சமாளிக்க போகிறது. கஜா புயல் காலத்தில் ஒரு மீனவர் கூட உயிர் இழக்கவில்லை. இரவு பகலாக கட்டுப்பாட்டு மையத்தில் தொடர்பில் இருந்து, கடந்த ஆட்சியில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.