சென்னை: மத்திய அரசு ஆகஸ்ட் 23ஆம் தேதி தேசிய பணமாக்கல் திட்டத்தை அறிவித்தது. அதன்படி, சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின் உற்பத்தி மற்றும் விநியோகம், சுரங்கம், எரிவாயு குழாய் ஆகிய அரசின் சொத்துகள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்படவுள்ளன. இதன்மூலம் அடுத்த நான்கு ஆண்டுகளில் ஆறு லட்சம் கோடி ரூபாய் நிதித் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரசின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மத்திய சட்டத் துறை முன்னாள்அமைச்சர் அஸ்வினி குமார் செய்தியாளரைச் சந்தித்துப் பேசினார்.
நாட்டு மக்கள் பாதிப்பு
அப்போது அவர், "மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய பணமாக்கல் திட்டம் ஒரு திட்டமிட்ட கொள்ளை; சட்டமயமாக்கப்பட்ட திருட்டு. மத்திய அரசு தனக்கு நெருக்கமான ஒருசில பெரும் பணக்காரர்களுக்கு உதவும் வகையில் இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இதனால் நாட்டு மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். பொருள்களின் விலைவாசி உயரும், சந்தையில் விலை ஏற்ற இறக்கம் அதிகரிக்கும்.
இந்தத் திட்டத்தால் ஆறு லட்சம் கோடி ரூபாய் இலக்கை அடைய முடியாது. பொதுத் துறை நிறுவனங்களில் தனியாரை அனுமதிப்பதால் அங்கு வேலை இழப்பு ஏற்படுவதற்கான இடர் உள்ளது. அதேபோல இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படாத நிலை ஏற்படும். கடைகளில் தள்ளுபடி விற்பனை நடத்தப்படுவதுபோல நாட்டின் சொத்துகள் விற்பனை செய்யப்படுகிறது.