சென்னை:திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கித் தாக்கிய வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரை ஐந்து நாள்கள் காவல் கேட்டு தண்டையார்பேட்டை காவல் துறையினர் ஜார்ஜ் டவுன் 15ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணை இன்று (பிப்ரவரி 25) 15ஆவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முரளி கிருஷ்ணா ஆனந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. இதையொட்டி புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயக்குமாரை காவல் துறையினர் பலத்த பாதுகாப்போடு அழைத்துவந்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தினர்.
அப்போது, ஜெயக்குமார் தரப்பில் அரசு தலைமை முன்னாள்குற்றவியல் வழக்கறிஞர் ஏ. நடராஜன் ஆஜரானார். காவல் துறைத் தரப்பில் அரசு வழக்கறிஞர் பிரியதர்ஷினி ஆஜரானார். ஜெயக்குமார் பதிவிட்ட காணொலி குறித்து ஆய்வுசெய்து விசாரிக்க வேண்டும். அதற்காக போலீஸ் காவல் வழங்க வேண்டும் எனக் காவல் துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
மேலும் சிசிடிவி ஆவணங்களையும் சேகரித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், திமுக பிரமுகரைத் தாக்கிய சமூக வலைதளத்தில் காணொலியைப் பதிவேற்றம் செய்த நபர்கள் யார் என்பது குறித்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அதற்காக காவல் வழங்க வேண்டும் என்று வாதத்தை காவல் துறை தரப்பில் தொடர்ந்து முன்வைக்கின்றனர்.
நந்தினி சத்பதி வழக்கு, பிரியதர்சினி வழக்கு, அம்புஜா குல்கர்னி வழக்கு போன்ற வழக்குகளைக் காவல் துறை தரப்பில் மேற்கோள்காட்டி காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறைத் தரப்பில் கேட்கப்பட்டது.