சென்னை:பிப்ரவரி 3ஆம் தேதி பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி அதிமுக சார்பில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழ்நாடு முழுவதும் பேரணி நடத்த உள்ளதாகவும், அதன் ஒரு பகுதியாக சென்னையில் நடத்துவதற்காக காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அனுமதி கேட்டு கடிதம் வழங்கியுள்ளதாக செய்தியாளரிடம் கூறினார்.
பின்னர், ஈரோடு மாவட்ட இடைத்தேர்தலை பொறுத்தவரை வேட்புமனுவை தாக்கல் செய்ய வருகிற 31ஆம் தேதி வரை நாட்கள் இருப்பதாகவும், மற்றவர்கள் வேட்பாளரை அறிவித்தால், அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை எனவும், நிச்சயமாக தேர்தலில் வெற்றி பெறப்போவது நாங்கள் தான் எனவும் அவர் தெரிவித்தார்.
அதிமுகவைப் பொறுத்தவரை விருப்ப மனுக்களைப் பெற்று, அந்த தொகுதியில் மக்கள் செல்வாக்கு யார் வைத்துள்ளார்கள் என்கிற அடிப்படையில் சீட் கொடுக்கப்படுகிறதாகவும், ஆனால் திமுக அப்படி இல்லை ஒரு சர்வாதிகார ஆட்சியாக தான் இருந்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
தேர்தலில் தங்களது கூட்டணிக்கட்சிகள் நிச்சயம் எங்களுக்கு ஆதரவு தருவார்கள் எனவும், பாஜகவை பொறுத்தவரை தேசிய கட்சி தலைமையில் அவர்கள் அனுமதி பெற்ற பிறகு தான் தெரிவிப்பார்கள் எனவும் அவர் கூறினார். அதிமுக கட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருப்பதாகவும், ஆகவே நிச்சயம் இரட்டை இலை தங்களுக்குத் தான் வரும் என அவர் கூறினார்.
இந்த தேர்தல் போட்டியைப் பொறுத்தவரை ஜனநாயகத்திற்கும், பணநாயகத்திற்கும் நடக்கின்ற போட்டி; பணநாயகம் வென்றதாக சரித்திரம் இல்லை; நிச்சயம் ஜனநாயகம் வெல்லும் என நம்புகிறேன் என அவர் தெரிவித்தார். திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், மீனவர்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும்; இதுவரை யாருக்கும் அவர்கள் நிவாரணம் வழங்கியது இல்லை என்றும்; இவையெல்லாம் தேர்தல் நேரத்தில் பிரதிபலிக்கும் என ஜெயக்குமார் கூறினார்.